வனம் ஓரிரவில் உருவாக்கும் விதை|  கதையொன்று படிப்போமா?

எழுதுவது : ஜெயக்குமாரி

அந்த ஆலமரத்தில் அடியில் இந்த குட்டி யானை எவ்வளவு நாட்களாக நிற்கிறது என்று கணக்கு தெரியவில்லை தேவதைக்குசிலிர்ப்பாக  இருந்தது.

இந்த குட்டி யானையின் வேண்டுதலை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது அசையாமல் நின்று கொண்டிருந்த குட்டி யானை தன் சின்னஞ்சிறு துதிக்கையை நீட்டி காற்றை உறிஞ்சுகிறது அதன் பெயர் பிள்ளை.

சற்று தூரத்தில் அதன் அம்மாவும் பக்கத்தில் பெரியம்மா மற்றும் சித்தி, அதோ அது அந்த கூட்டத்தின் தலைவி பிள்ளையின் பாட்டி…. நாம் ஐந்து பேர் தான் இந்த கூட்டத்தில் எஞ்சி இருக்கோம்….

பாட்டி யானை, சில நாட்களுக்கு முன்பு கூறியது இன்னமும் பிள்ளையின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.. தான் பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தன் அப்பா யானை, பிற ஆண் யானைகளைப் போல தந்தம் களவாடும் மனிதர்களால் கொல்லப்பட்டதை கேட்டபோது பிள்ளைக்கு, உடம்பை ஆட்டம் கண்டது இதோ இந்த இடமும் சில மரங்களும் சின்னஞ்சிறு சுனை நீரும் மட்டும் தான் இங்கிருக்கும் தங்களின் வாழ்வாதாரம்…


எங்கும் எங்கெங்கும் பசுமையும் நீரும் அற்ற பொட்டல் வெளி ஒரு காலத்தில் ….கடந்த காலத்தில் இதுவோர் அடர் வனமாக இருந்த பெரிய நிலப்பரப்பு… இப்பொழுது மோடு தட்டிப் போன காய்ந்த… புல் பூண்டு கூட முளைக்காத தரிசாக புழுதி பறக்க கிடப்பதை பிள்ளை என்று அந்த ஆறு மாதக் கன்று கண்டது….

என்ன செய்தால் காட்டை, மரங்கள் நிறைந்த வாழ் இடத்தை ,வனத்தை மீண்டும் கொண்டு வர இயலும் …தன் சிறு கண்களை அகற்றி தன் சின்னஞ்சிறு துதிக்கையை ஆட்டி பெரிய காதுகளை அசைத்து குடுகுடுவென்று தன் பாட்டியின் அருகில் ஓடி மீண்டும் அந்த கேள்வியை எழுப்புகிறது பிள்ளை. பாட்டிம்மா என்ன செய்தால் நம் வனத்தை மீண்டும் கொண்டுவர முடியும்???


தவம் செய்….அதோ அந்த ஒற்றை ஆலமரம் அடியில் நின்று தவம் செய்….ஏதேனும் வழி கிடைக்கிறதா என்று பார்ப்போம்….எந்த வழியும் கிடைக்காது என்று தெரிந்திருந்தும்,இளம் கன்றுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறுகிறாள் அந்த முதிய தும்பிக்கையாள்…..தன் தும்பிக்கையால் பிள்ளை யானைக கன்றைத் தழுவி ஆசியும் கூறுகிறாள்…..

பிள்ளையின் தவத்தை மெச்சிய தேவதை …குட்டி யானைக்கு காட்சிதர….
மரங்கள் அடர்ந்த காடு வேண்டும் என்று கேட்ட பிள்ளையின் துதிக்கையில் அந்த சிறு விதையைத் தருகிறது…..


” இது ஓரிரவில் வனம் உருவாக்கும் விதை….இந்த விதையை அதோ விரிந்து கிடக்கும் பாலைவனத்தில் போட்டால் நாளை ,பல பல லட்சக்கணக்கான மரங்களும் நீர் அருவிகளும் கொண்ட காடு உருவாகி இருக்கும்…என்று கூறி மறைகிறது அந்தப்பிரகாச தேவதை….


ஒரு பெரும் சந்தோஷப் பிளிரலுடன் துதிக்கையை சுழற்றியபடி ஓடும் பிள்ளையை பார்த்துக்கொண்டிருந்த மற்ற நான்கு யானைகளும்,தத்தம் காதுகளை அசைத்து தும்பிக்கைகளை உயர்த்தி தாங்களும் சந்தோஷப் பிளிரலை எழுப்பின….. பிள்ளை யானைக்கன்றால் வீசி எறியப்பட்ட,நாளை அடர வனமாகமாறப்போகும் அந்த விதை மண்ணைத்தொட்டது……


ஒரு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் தன் தாயை நோக்கி வந்துகொண்டிருந்த பிள்ளையின் காதுகளில் தேவதை கூறி கடைசி வரி எதிரொளித்தது….
இந்த வனம் மனிதக்கண்களுக்குக் கட்புலனாகாது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *