தன்னல மற்ற சேவகி..!
இந்த மண்ணில் பலர் பிறக்கின்றார்கள் அதில் ஒருசிலர் தான் சேவை மனப்பான்மையோடு பிறக்கிறார்கள்.அவ்வாறு பிறக்கும் சிலர் தான் சவால்களை கடந்து வெற்றி பெறுகிறார்கள்.அந்த வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில்(UNHRO) நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பணியாற்றும் சமூக சேவகியான சரீனா உவைஸ் எமது வெற்றி நடையோடு இணைந்து பல விடயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.அவருக்கு முதற் கண் வணக்கத்தினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறது வெற்றி நடை.
✍️வணக்கம் அம்மா உங்களை பற்றிய சிறிய அறிமுகம் எமக்காக வேண்டும்?
என் பெயர் சரீனா.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கண்டி மாவட்டம், கடுகண்ணாவைக்கு பக்கத்தில் உள்ள றம்மலக எனும் கிராமத்தில்.
✍️உங்களுடைய கல்வி நடவடிக்கைகள் எங்கு ஆரம்பமாகியது?
ஆரம்பக்கல்வி கற்றது க/தெனு/ இழுக்வத்த முஸ்லிம் வித்தியாலயத்திலும், பின்பு க/கடு/ குருகுத்தல முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பயின்றேன்.
✍️உங்களுடைய வாழ்க்கை மற்றும் தற்போதைய பணிகள்?
என்னுடைய திருமணம் – மாவனல்லை நயாவலை எனும் இடத்தில் நடைபெற்றது. தற்போது வசிப்பது ராஜகிரிய. நான் சில காலம் ஹில்ப்ரீஸ் தனியார் பாடசாலையில் ஆசிரியையாகவும், நிவ் மென்ஸ் கல்லூரியில் அலுவலகத்தில் நிர்வாக அலுவலராகவும் பணியாற்றினேன். தற்போது நிர்வாக பணிப்பாளர் நாயகமாக UNHRO சர்வதேச அமைப்பில் பணிபுரிகின்றேன்.
✍️உங்களுடைய கலைத்துறை பயணம் எவ்வாறு அமைந்து?
கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரம்பத்தில் எனது படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். தற்போது முகப்புத்தகத்தில் கவிதைகள்.காம் ( https://www.facebook.com/fathimasafnapoems?mibextid=ZbWKwL ) எனும் பெயரில் எனது பாக்களை பதிவிட்டுவருகிறேன். மேலும் தையல் கலை (எம்ராய்டரி) மற்றும் அலங்காரப் பொருட்களை தயாரிப்பது எனது பொழுதுபோக்காகும். எனது சில கை வேலைப்பாடுகளை My Handloom Creations ( https://www.facebook.com/myhandloomcreations ) எனும் முகப்புத்தக பக்கத்தில் காணலாம்.
✍️உங்களுடைய சமூக சேவைகள் எவ்வாறு அமைந்துள்ளது ?
என்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு சமூக நல உணர்வுடன் முடியுமானவரை உதவிகளை செய்துவருகிறேன்.
மொழிப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிங்களம் மற்றும் ஆங்கிலம் தெளிவூட்டல்களையும், தையல் மற்றும் கணினி துறையில் ஆர்வமுள்ள வசதியற்ற சிறார்களுக்கும் பெண்களுக்கும் அதனை கற்றுக் கொடுப்பதையும் இலவசமாக செய்துவருகிறேன். மேலும் நான் பணிபுரியும் UNHRO சர்வதேச அமைப்பிலும் சமூக அக்கறை கொண்டு எந்த விதமான ஊதியமும் பெறாமல் பணியாற்றிவருகிறேன்.
தமிழும் இலக்கியமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தமிழா தமிழ் பேசு புலனம்
எனும் வாட்ஸ்அப் குழுமத்தில் தினமும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கான சான்றிதழ் தயாரிக்கும் பணியை நான் ஐந்து வருடங்களாக இலவசமாக மன மகிழ்வுடன் செய்து வருகிறேன்.
✍️மிக சிறப்பு அம்மா,ஒரு பெண் எனும் போதுஅவள் பயணிக்கும் தருணம் பல சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும் .அவைகளை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றிப்பெற்று வந்தீர்கள்?
இவளுக்கு இது தேவை தானா ? என்று இன்றும் என்னை ஏளனமாக பார்க்கும் சிலர், என் செவி பட கூறி சிரிக்கும் சிலர், உன்னால் முடியும் என ஊக்குவிக்கும் தோழிகள் சிலர் என தாண்டி வந்த பாதையை திரும்பி பார்த்தால் துன்பம் மட்டுமே மீதி. நான் எதையும் கண்டுகொள்ளாமல் நடந்ததால் மட்டுமே வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்ய முடிகிறது. வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் வையும் இவ்வையகத்தில் தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என்று தன்னம்பிக்கையுடன் பயணிக்கிறேன். எனக்கு பிடித்ததை செய்கிறேன். இறைவன் அருளால் வெற்றி பின் தொடர்கிறது.
✍️ உங்களுடைய நேரத்தை எம்மோடு பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றிகள் அம்மா. இன்னும் இன்னும் நிறைய சேவைகள் செய்து சாதனை படைத்திட இனிமையான வாழ்த்துக்களை வெற்றி நடை தெரிவித்து மகிழ்கின்றது.மிக்க நன்றி அம்மா🙏
வெற்றி நடைக்கு மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்