பண்டைய தொழில்..!

தரம்சேர் பெருமை

நீரில் வயலில்
நனைந்த நாற்றை
நம்பி சிறுமி
கடந்தால் சேற்றைப்
பாரில்‌ வளர
பயிர்கள் எடுத்தாள்
பண்டைத் தொழிலில்
பொழுதை விடுத்தாள்

ஊரில் தழைக்க
உழைப்பு வேண்டும்
உறங்கிக் கிடந்தால்
ஊளை தோன்றும்
நூரில் ஒருவர்
நடவு இயக்கம்
நாட்டில் செழுமை
நன்மை பயக்கும்

வாரிக் கொடுக்கும்
வள்ளல் போல
வானும் மண்ணும்
வளமும் சூழ
மாரி பெய்து
முளைக்கும் நெல்லும்
மனிதம் மழையின்
மாண்பைச் சொல்லும்!

ஆறில் கூட
அரும்பும் கடமை
அவனிப் பூக்க
ஆக்கும் பசுமை
தேறிப் பிறந்தத்
தரம்சேர் பெருமை
தரணி கண்டால்
தீரும் வறுமை

~கவிவேந்தர் டாக்டர் சோமதேவன் சோமசன்மா ஜொகூர்,மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *