மனிதம் சிதைக்கும் மணிப்பூர்..!
மனிதம் சிதைக்கும்
மணிப்பூர்
வதந்தி ஒன்று வன்மத் தீயில்!
வசந்தம் கொன்ற வெறியின் வாயில்!
பதவி என்ற பாத கங்கள்
பெருகும் இனத்தின் படுகொ லைகள்
புகழின் உச்சம் பார்த்த மணிப்பூர்
பலரும் மெச்சும் பெருமை யுடையூர்
பகரும் அளவில் பொழிவைக் கொணர்ந்தும்
பலியின் பீடம் பிணியாய் உறுத்தும்!
சுற்றிக் காடு சூழ்ந்த நிலமும்
சிறப்பைக் கூறும் சுற்று லாவும்
பெற்ற வளங்கள் பாரின் பலமாம்!
பண்பு நலன்கள் பொதிந்தத் தளமாம்!
பெண்ண ரசியாய் புனிதப் பிறப்பாய்
புண்ணி யங்கள் பேறு முன்பாம்!
வன்மை கொடுமை வதைக்கும் கடுமை
வெறுப்பைக் கக்கும் வினைகள் இன்றாம்!
பெண்டிர் பலரைப் புறத்தில் கிடத்தி
பண்ணும் வதங்கள் பரிதா பகதி!
குன்றிப் போன மேன்மை குணங்கள்!
கயவர் சிலபேர் குவிக்கும் பிணங்கள்!
பிரத மரிதைப் பெரிதாய் கொள்ளார்
பிறகெ தற்குப் பொறுப்பில் உள்ளார்?
வரண்டு மரத்த வெறுமை உள்ளம்
வீறு கொண்டா விரைந்(த்)து துள்ளும்?
மங்கை யர்கள் மானம் பறித்தல்
மலிந்து வழிந்து மிஞ்சும் செயல்கள்
செங்கு றுதியைத் தரையில் தெளித்து
செருக்கு வீதி தன்னில் களிக்கும்!
அம்ம ணங்கள் அவமா னங்கள்
அஞ்சி தினமும் அபலை அகங்கள்
கும்மா ளங்கள் கொண்டாட் டங்கள்
குடிகொண் டவர்கள் கொடிய விலங்கே!
அத்து மீறல் அல்லல் மேடாய்!
அநீதி தாக்கம் காட்சி கேடாய்!
உத்த மர்போல் உரைக்கும் தலைமை!
உணர்ச்சி குளத்தில் உமிழும் நிலைமை!
குக்கி கட்சி கொடிகள் பறக்கும்!
குத்திக் குதறிக் கழுத்தை அறுக்கும்!
சிக்கிச் சிதறும் சனத்தின் நடுக்கம்!
தூண்டும் சினத்தின் துலங்கல் தடுக்கும் !
மோடி அரசின் மந்(தை)த நிலையால்
மரணம் தொடர்ந்து மகிழ்ச்சி குலையும்!
பேடிப் போன்றோர் பதவி ஏற்றால்
பொல்லா பொழுதாய் புவியும் அழியும்!
மனைகள் எரிப்பு வாகம் உடைப்பு
மானி டரெனும் மிருகப் படைப்பு
வினைகள் தீர்க்க வேண்டும் கோவில்
வீணர் கையின் விளைவால் காவில்!
குழந்தை கூட காலன் பிடியில்!
காயம் அடைந்தோர் கலியின் நொடியில்!
அலங்கோ லங்கள் அரக்கர் அடியில் !
அலரின் அழுகை அலையாய் செவியில்!
பொறுப்பு அற்றோர் பண்ணும் குற்றம்
பதைக்கும் அறத்தைப்பழிக்கும் சுற்றம்!
வெறுப்பு வந்தால் உறுப்பை வெட்டும்
மூடர் மூர்க்கம் முடத்தைக் கூட்டும்!
ஒன்று சேர்ந்து உரக்க சொல்வோம்!
ஓங்கும் எதிர்ப்பின் ஒலியாய் செல்வோம்!
கொன்று குவித்தல் கூடா தென்று!
கூடி வாழ்தல் கெடுத லன்றே!
~கவிவேந்தர் டாக்டர் சோமதேவன் சோமசன்மா
ஜொகூர்,மலேசியா