படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க அனுமதிக்க வேண்டும் : அமைச்சர் இ.சந்திரசேகர் கோரிக்கை

யாழ். வலி.வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு, அக் காணிகளில் மக்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டுமென கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில், பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

வலி.வடக்கில் 2009 ஆம் ஆண்டு பொலிஸார் மற்றும் முப்படையினர் வசம் 23 ஆயிரம் ஏக்கர் காணி காணப்பட்டது. இக்காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன்படி, 21,000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2,640 ஏக்கர் காணி பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ளது. இக்காணிகள் மக்கள் பயன்படுத்தும் வகையில் விடுவிக்கப்பட வேண்டும்.

அத்துடன், வலி.வடக்கில் அண்மைக்காலத்தில் விடுக்கப்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படாதுள்ளது. இதற்கு காரணம் குடியிருப்பு காணப்படவில்லை என கூறப்படுகின்றது.

வசாவிளான் சந்தி வரையான வீதி மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்படவேண்டும். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு காணி விடுவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது, கூட்டத்தில் பங்கெடுத்திருந்த இராணுவ உயர் அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *