ஹாட்லியின் வசம் இரட்ணசபாபதி வெற்றிக்கிண்ணம் 2025 

விறுவிறுப்பாக நடைபெற்ற, ரட்ணசபாபதி வெற்றிக்கிண்ணத்திற்கான இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், இந்தவருடமும் ஹாட்லி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.


ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், நெல்லியடி மத்திய கல்லூரி அணி முதற்கோலை அடித்து முன்னிலை பெற்றது.

பின்னர் ஆட்டத்தை தம் வசமாக்க பலமாக ஆட்டத்தை வெளிப்படுத்திப் போராடிய ஹாட்லிக்கல்லூரி அணிக்கு,  தண்ட உதை வாய்ப்புக்கிடைக்க,  அதை அற்புதமான கோலாக்கினர்.
அதன்படி போட்டி சமநிலை பெற,போட்டியின் நிறைவில்  ஐந்து சமநிலை தவிர்ப்பு உதைகள் இரண்டு அணிகளுக்கும் வழங்கப்பட்டது.

அதன்படி விறுவிறுப்பான அந்த உதைகளின் வாய்ப்புக்களில், ஹாட்லியின் கோல் காப்பாளர் ஒன்றைத் தடுத்துவிட , ஹாட்லியின் வெற்றி பிரகாசமானது.

அதன்படி  நெல்லியடி மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில், அதை தோற்கடித்த
ஹாட்லிக்கல்லூரி அணி வெற்றிக்கிண்ணத்தை இந்தவருடமும் மீண்டும் சுவீகரித்தது.

அதேவேளையில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், நெல்லியடி மத்திய கல்லூரி அணி , ஹாட்லிக்கல்லூரி அணியை , 3 க்கு பூச்சியும் என்ற கோல்கணக்கில் வெற்றிவாகை சூடியது.

குறித்த போட்டிகளுக்கு முன்னதாக நடைபெற்ற இரு கல்லூரிகளின் ஆசிரியர்களின் அணிகளுக்கு இடையிலான போட்டி, மற்றும் இரு கல்லூரிகளின் பழைய மாணவர் அணிகள் இடையிலான போட்டியில்  நெல்லியடி மத்திய கல்லூரி அணியே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டிகளை இந்தத் தடவை நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்ததோடு, அதற்கான கூடியளவு பங்களிப்பை கனேடிய நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் வழங்கியிருந்தனர்.

குறித்த போட்டியை ஹாட்லி பழையமாணவர்களின் ஒருங்கிணைந்த கழகமான ஐக்கியராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழகம், உலகமெங்கும் வாழும் பழையமாணவர்களும் மக்களும் பார்க்கும் வகையில்,  நேர்த்தியாக நேரலையில் ஒளிபரப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காணொளியை கீழே காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *