பதிவுகள்

காரைதீவு பொலிஸ் நிலையத்தில் திடிரென கைத்துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம் !

கைத்துப்பாக்கி திடிரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை(17) இரவு இடம்பெற்றது.

வழமைபோன்று கடமை நிமிர்த்தம் துப்பாக்கியை பெற்றுக்கொள்வதற்கு ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பான நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றினை பெற சென்றவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த கைத்துப்பாக்கியை பரிசீலனை செய்வதற்காக மேசையில் வைத்த வேளை திடிரென கைத்துப்பாக்கி தவறி வெடித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத் வழிகாட்டுதலில் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் 39 வயதுடைய நல்லதம்பி நித்தியானந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார் .வலது காலில் துப்பாக்கி ரவை துளைத்துச் சென்ற நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *