எஞ்சி நிற்பது அவமானம் மட்டுமே..!
🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹
துடைப்பத்தின்
புலம்பல்…படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹
அசுத்தம் செய்யும்
கரங்களுக்கு
மோதிரம் போடுவார்கள்
ஆனால்
அதை சுத்தம் செய்யும்
எங்களை
மூலையில் போடுவார்கள்…!!
கூட்டிப் பெருக்கியே!
தேய்ந்து அழிந்தாலும்
யாரும்
எங்களுக்கு
மதிப்பு கூட்டவோ
புகழைப் பெருக்கவோ
முன்வந்தது இல்லை…
பணக்காரன்
எங்களை
அதிக
தொகை கொடுத்து
வாங்கினாலும்
பூசையறையிலா
வைக்கப்போகிறான்..?
என்னதான்
உழைத்து தேய்ந்தாலும்
எங்களுக்கு
எஞ்சி நிற்பது
என்னவோ
அவமானம் மட்டுமே …!
உழைப்புக் கூட
இடம் பார்த்து தான்
மதிக்கப்படுகிறதோ…?
தூய்மையைக்
கொடுத்துவிட்டு
அழுக்கைச் சுமக்கிறோம்…!!
குளியல் அறை முதல்
கழிவறை வரை சுத்தம்
செய்கிறோம்….
இறுதியில்
எங்களை
சுத்தம் செய்தான்
யாரும் இல்லை….?
எங்களை மட்டும்
விட்டு விடுவார்களா என்ன ?
வீட்டு துடைப்பம்
வாசல் துடைப்பம் என்று
இரண்டு சாதியாக
பிரித்து வைத்துள்ளார்கள்..
பணக்காரன் வீட்டில்
தரமானதாகவும்
ஏழை வீட்டில்
தரமற்றும் இருக்கிறோம்….
துடைப்பம் முதல்
துண்டு வரை
தரத்தை தீர்மானிப்பது
பணம் மட்டுமே..!
பணம்
கண்டுபிடித்தது பாவமா ?
மனிதனுக்கு
மனிதனே
இட்டுக்கொண்ட சாபமா?

என்னதான்
நான்
விளக்கிச் சொன்னாலும்….
“மயில் பீலி “
சொன்னதென்று
மூளையிலா
வைக்கப் போகிறார்கள்….?
“துடைப்பம் “
சொன்னதென்று
மூலையில் தான்
தூக்கி போடப்போகிறார்கள்…!! *கவிதை ரசிகன்*
🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹