இதுவரை 52 நாடுகளுக்குப் பறந்த ஏரோபுளொட் இனிமேல் பக்கத்து பெலாரூஸுக்கு மட்டுமே பறக்கும்.
உலக நாடுகள் பலவற்றின் வானத்தில் பறக்கத் தடைசெய்யப்பட்ட ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான ஏரோபுளொட் இதுவரை 52 நாடுகளின் 142 நகரங்களுக்குப் பறந்து வந்தது. செவ்வாயன்று முதல் அது தனது பக்கத்து நாடான பெலாரூஸுக்கு மட்டுமே பறக்கும் என்று அறிவித்திருக்கிறது. வெளிநாடுகளுக்கு வேறு வழிகளால் பறப்பினும் அந்த நாட்டின் விமான நிலையங்களில் அவ்விமானங்கள் தடுத்து வைக்கப்படலாம் என்பதால் அதைச் செய்ய ரஷ்யா விரும்பவில்லை.
ஏரோபுளொட் நிறுவனம் 2019 ம் ஆண்டில் சுமார் 140 மில்லியன் டொலர் பெறுமதியான இலாபத்தைப் பெற்றிருந்தது. ஏரோபுளொட் உட்பட உக்ரேன், ரஷ்யா ஆகிய நாடுகளின் பாவிப்பிலிருக்கும் பாதிக்கு மேற்பட்ட விமானங்கள் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசிய நாடுகளின் வெவ்வேறு நிறுவனங்களில் வாடகைக்கு எடுக்கப்பட்டவையே. அவற்றில் சிலவற்றை குறிப்பிட்ட நிறுவனங்கள் பொருளாதாரத் தடை காரணமாக மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரியிருக்கின்றன. மார்ச் 28 ம் திகதியுடன் ரஷ்யாவின் விமான நிறுவனங்களுடனான வாடகை விமானச் சேவை ஒப்பந்தங்கள் காலாவதியாக்கப்பட்டுவிட்டன. அதன் பின்னரும் ரஷ்யாவில் மாட்டிக்கொள்ளும் விமானங்களின் நிலை என்னாகும் என்பது பற்றி எவராலும் பதிலளிக்க முடியவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்