நோர்வேயில் ஆராய்ச்சியாளராக இருந்த ஒருவர் ரஷ்ய உளவாளி என்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நோர்வேயின் டிரொம்சோ பல்கலைக்கழகத்தில் சுமார் ஒரு வருடமாக ஆராய்ச்சியாளராக இருந்த நபரொருவர் ரஷ்ய உளவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரஷ்யாவுக்காக உளவு பார்த்தல் என்ற சந்தேகத்தில் நோர்வேயில் சமீபத்தில் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறவர்களில் இந்த நபரும் ஒருவராகும். இவர் பிரேசில் குடிமகன் என்ற அடையாளத்துடன் நோர்வேயில் சுமார் ஒரு வருடமாக வாழ்ந்து வருபவராகும்.

சுமார் முப்பது வயதான அந்த நபர் பிரேசில் குடிமகன் என்ற போர்வையில் உளவு பார்க்கும் நோக்கத்துடன் நோர்வேக்குள் நுழைந்த ஒரு ரஷ்யக் குடிமகனே என்று நோர்வேயின் உளவுத்துறை குறிப்பிடுகிறது. அங்கேயே வாழ்ந்து தன் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு ரஷ்யாவுக்கு உளவு பார்ப்பதற்காக வந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

வடக்கு நோர்வேயிலும், நோர்டிக் பிராந்தியத்திலும் பாதுகாப்பு வலயத்தைப் பலமாக்குவது பற்றி நோர்வேயில் நடந்துவரும் ஆராய்ச்சிகளில் பங்கெடுக்கும் குழுவில் அந்த நபர் இணைந்திருந்தார். ரஷ்யாவின் உளவுத்துறையைச் சேர்ந்த அந்த நபர் தனது வேலையின் மூலம் எப்படியான இரகசிய விபரங்களைக் கையாண்டார் அல்லது கையகப்படுத்திக்கொண்டார் என்று நோர்வேயின் உளவுத்துறை பொலீசார் குறிப்பிட மறுக்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *