சீனாவில் காணப்பட முன்னரே கொவிட் 19 உலகமெங்கும் பரவியிருந்தது என்கிறார்கள் நோர்வே ஆராய்ச்சியாளர்கள்.

2019 டிசம்பர் 12 ம் திகதியே நோர்வேயின் ஆகர்ஹுஸ் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் இரத்தத்தில் கொவிட் 19 காணப்பட்டது என்று நோர்வே ஆராய்ச்சிக்குழு ஒன்று குறிப்பிடுகிறது. அந்தப் பெண் நவம்பர் மாத இறுதியிலேயே அந்த நோயால் தொற்றியிருக்கவேண்டும் என்று அவர்கள் கணிக்கிறார்கள்.

“ஐரோப்பாவில் கொரோனத்தொற்று முதல் முதலாக பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட முன்னரே 1,500 கர்ப்பிணிப் பெண்களுக்கு அது தொற்றியிருந்ததை எங்களால் காண முடிகிறது. எங்களுடைய கண்டுபிடிப்பு கொவிட் 19 தொற்றுகளின் சரித்திரத்தை நோர்வேயிலும், உலகளவிலும் மாற்றியிருக்கிறது,” என்கிறார் தலைமை விரிவுரையாளர் அன்னா ஏஷில்ட்.

“நாங்கள் தொற்றுக்களைக் கண்டுபிடித்திருக்கும் பெண்கள் உலகம் முழுவதிலிருந்தும் வந்தவர்கள். அவர்களில் சிலர் கொவிட் 19 தொற்றைப் பிறப்பிலோ அல்லது உலகின் வெவ்வேறு பாகங்களிலிருக்கும் தமது உறவினர்கள் மூலமோ பெற்றிருக்கச் சாத்தியமுண்டு,” என்கிறார் ஏஷில்ட். 

நோர்வேயில் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு அவைகள் யாருடையவை என்ற அடையாளமின்றிப் பாதுகாக்கப்படுகிறது. இரத்த மாதிரி எடுப்பதன் மூலம் அவர்களிடம் இருக்கும் வியாதிகளை வேண்டுமானால் ஆராய்ந்தறிய முடிகிறது. அப்படியான இரத்த மாதிரிகளிலேயே இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. 

இதுவரையிலான ஐரோப்பிய கொரோனாத் தொற்று விபரங்களின்படி 24 ஜனவரி 2020 இல் தான் முதல் தடவையாக பிரான்ஸில் அது சிலருக்குத் தொற்றியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் டிசம்பர் 2019 இல் கொரோனாத்தொற்றுள்ளவர்கள் பற்றிய விபரங்கள் வெளியாயின.

27 டிசம்பர் 2019 இல் பிரான்ஸில் சளிக்காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரிடம் கொவிட் 19 தொற்று இருந்ததாக ஏற்கனவே மே 2020 இல் தெரிவிக்கப்பட்டது. 

“இந்த ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் அறிந்துகொள்ளக்கூடியது என்னவென்றால் உலகின் வெவ்வேறு பாகங்களில் நீண்ட காலமாகவே கொவிட் 19 கிருமி பரவியிருந்திருக்கிறது என்பதாகும். நோர்வே போலவே கர்ப்பிணிப் பெண்களின் இரத்த மாதிரிகளை எடுத்துச் சேமிப்பில் வைத்திருக்கும் நாடுகள் விரல்விட்டு எண்ணக்கூடியவை. எனவேதான் இதுபற்றிய விபரங்கள் எங்களுக்கு இன்னும் எட்டவில்லை” என்கிறார் அன்னா ஏஷில்ட்.

சாள்ஸ் ஜெ. போமன்