“ஐரோப்பிய நாடுகளில் கொரோனாத் தொற்று அதிகமாக இருப்பினும், இறப்புக்கள் மிகக்குறைவாக இருக்கின்றன!”

திங்களன்று பிற்பகல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொற்றுநோய்த் தடுப்புத் திணைக்களம் [ECDC] தனது பிராந்தியத்தில் கொவிட் 19 நிலைமை பற்றிய ஒரு பத்திரிகையாளர் நேர்காணலை நடாத்தியது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாத்தொற்றுக்கள் மிக அதிகமாகவே தொடர்ந்தும் இருக்கின்றன ஆனால், முன்னர் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்த காலம் போலன்றி இறப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது என்று மக்கள் ஆரோக்கியத்துக்கான ஒன்றியத்தின் பிரதிநிதி ஸ்டெல்லா கிரியாகிடெஸ் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும் சாத்தியக்கூறுகளே தெரிவதாகக் குறிப்பிட்ட கிரியாகிடெஸ் ஒமெக்ரோன் திரிபுத் தொற்றுக்களே பெருமளவில் ஐரோப்பிய நாடுகளில் ஆக்கிரமித்திருப்பதாகக் குறிப்பிட்டார். டென்மார்க், சுவீடன், அயர்லாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் ஒமெக்ரோன் தொற்றே 50 விகிதத்துக்கும் அதிகமானவர்களைப் பாதித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலைமையில் சமூகத்தின் அவசியமான தேவைகளைத் தொடர்ந்தும் பேணுவது அவசியம் என்று சுட்டிக்காட்டிய அவர் வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தொற்றுநோய்த் தடுப்புத் திணைக்களம் வெளியிட்டிருக்கும் தனிமைப்படுத்தல் விதிகளை அனுசரிக்கும்படி கோரினார். அந்த விதிகளின்படி தனிமைப்படுத்தல், தொற்றுள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களுக்கான கையாளல் போன்றவைகள் மென்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்