பால்டிக் கடலைச் சுற்றியிருக்கும் நாடுகள் தமது எரிசக்தித் தொடர்புகள் மீது பலத்த காவல்.

ரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே பால்டிக் கடலின் கீழாகப் போடப்பட்டிருக்கும் எரிவாயுக் குளாய்களிரண்டிலும் இதுவரை நான்கு வெடிப்புகள் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அவ்வெடிப்புகள் திட்டமிட்டு வெடிமருந்துகளால் தாக்கப்பட்டிருப்பதாகவே இதுவரை நடத்தப்பட்ட ஆராய்வுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் நோர்வேயின் எண்ணெய் உறிஞ்சும் மையங்களின் பிராந்தியத்தில் இனந்தெரியாத காற்றாடி விமானங்கள் பறந்ததாகவும் உளவுச்செய்திகள் குறிப்பிட்டிருக்கின்றன. எனவே, ஐரோப்பாவின் முக்கிய எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறியிருக்கும் நோர்வேயிலிருந்து வெளியே செல்லும் சகல எரிசக்திக் குளாய்கள் மீதும் கடும் காவல் போடப்பட்டிருக்கிறது.  

இதுவரை நோர்த்ஸ்டிரீம் 1,2 ஆகிய குளாய்களில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளில் இரண்டு சுவீடன் பகுதியிலும், மற்றவை டென்மார்க் பிரந்தியத்திலும் இருக்கின்றன. அவ்வழியே எரிவாயுவை ஜேர்மனிக்குக் கொடுக்கும் நிறுவனம் ரஷ்ய அரசுக்குச் சொந்தமானதாகும். எனவே, ரஷ்யா சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளிடம் இதுவரை அக்குளாய்களின் வெடிப்புப் பற்றித் தெரிந்துகொண்ட விபரங்களைத் தம்மிடம் பகிர்ந்துகொள்ளும்படி கோரியிருக்கிறது.

அக்குளாய்களின் ஒரு பாகம் ஜேர்மனியில் முடிகிறது, ஆனால் ஆரம்பிப்பது ரஷ்யாவின் பிராந்தியத்திலாகும். அங்கேயிருந்து ரஷ்யா அக்குளாய்கள் வழியாகத் தொடர்ந்தும் எரிவாயுவைச் செலுத்துகிறதா அதன் அளவு என்ன போன்ற விபரங்களெதுவும் ரஷ்யாவால் வெளியிடப்படவில்லை. நான்கு வெடிப்புகளிலும் இருந்து வெளியாகும் வாயுகளின் அளவுகள் கணிக்கப்பட்டதலில் அது சுவீடனிலிருந்து வருடமொன்றுக்கு வெளியாகும் நச்சுக்காற்றின் 40 % விகிதம் என்று அளவிடப்பட்டிருக்கிறது. 

டென்மார்க் வியாழனன்று வெளியிட்டிருக்கும் செய்திகளின்படி எரிவாயுக்குளாய் வெடித்த பகுதியில் ரஷ்ய இராணுவக் கப்பல்கள், நீர்மூழ்கிகளைக் கடந்த வாரத்திலிருந்து உலவியது தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயம், ரஷ்யாவின் நடமாட்டம் பால்டிக் கடல் பிராந்தியத்தில் இருப்பது சாதாரணமானதே என்றும் டென்மார்க் குறிப்பிடுகிறது. இதுவரை அக்குளாய்களை வெடிமருந்து மூலம் தகர்த்தது ரஷ்யாவாகவே இருக்கும் என்றே பல இராணுவ ஆராய்வாளர்களாலும் சுட்டிக் காட்டப்படுகிறது. தொடர்ந்தும் நச்சுவாயுக்கள் வெளியேறும் அக்குளாய்களின் பகுதியை ஒழுங்காக ஆராயும் வாய்ப்பு இல்லாததால் உண்மையான குற்றவாளி எவரென்பதை யாராலும் திட்டவட்டமாகக் கூற இயலவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *