அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற மேற்றாணியார் பாலியல் குற்றங்கள் செய்தவர் என்கிறது வத்திக்கான் அறிக்கை.

கிழக்கு தீமோரின் விடுதலைக்காகப் போராடியதாகக் குறிப்பிடப்பட்ட மேற்றிராணியார் கார்லோஸ் சிமென்ஸ் பேலோ[Carlos Ximenes Belo] 1990 இல் சிறார்களைத் தனது பாலியச் இச்சைக்குப் பலியாக்கியது வெளியாகியதால் 2019 இன் பின்னர் அவரது நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தியிருப்பதாக வத்திக்கான் செய்தி வெளியிட்டிருக்கிறது. மேற்றிராணியார் பேலோ கிழக்குத் தீமோரின் போருக்கான தீர்வை வன்முறையின்றி முடித்து வைத்ததுக்காக 1996 இல் நோபல் பரிசைப் பெற்றவராகும்.

நெதர்லாந்தைச் சேர்ந்த சஞ்சிகையான De Groene Amsterdammer மேற்றிராணியார் பேலோவால் பாலியல் இச்சைக்குக்கு உள்ளாக்கப்பட்ட இருவர் வெளியிட்ட வாக்குமூலங்களை வெளியிட்ட பின்னரே வத்திக்கானிலிருந்து மேற்கண்ட விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. சஞ்சிகை பேலோ 1980 களில் பாதிரியாராக இருந்த சமயத்திலேயே இளவயதுப் பையன்களைத் தனது பாலியல் இச்சைக்குப் பாவித்தவர் என்று குறிப்பிடுகிறது. 

சுதந்திரமாகத் தனது திருச்சபைப் பிராந்தியத்தில்  நடமாட அனுமதி மறுப்பு, வயதுக்கு வராதவர்களுடன் தொடர்பு கொள்ளத் தடை, கிழக்குத் தீமோர் மக்களுடன் தொடர்புகள் வைக்கலாகாது போன்ற கட்டுப்பாடுகள் பேலோ மீது வத்திக்கானால் போடப்பட்டிருக்கின்றன.

2002 இல் பேலோ தனது மேற்றிராணியார் பதவியிலிருந்து விலகி மொசாம்பிக் சென்று அங்கே வயதுக்கு வராதவர்களுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டது ஏன் என்பது பற்றி வத்திக்கான் விபரங்களைத் தெரிவிக்கவில்லை. பேலோவின் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி கிழக்குத் தீமோர் அரசு, மனித உரிமை அமைப்புக்கள், திருச்சபைப் பணியாளர்கள் எல்லோருக்குமே தெரிந்திருந்தது என்கிறது விபரங்களை வெளியிட்ட நெதர்லாந்துச் சஞ்சிகை. அதற்கான பல சாட்சியங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பேலோவைப் பற்றிய விபரங்கள் வெளியானதும் பேலோவைப் பெருமளவில் போற்றிக் கொண்டாடும் கிழக்குத் தீமோர் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. போர்த்துக்காலில் வாழும் பேலோவிடம் இதுபற்றிப் பத்திரிகையாளர்கள் தொடர்புகொண்டு விசாரித்தபோது பதிலேதும் வெளியிடப்படவில்லை. பேலோவுடன் சேர்ந்து நோபல் பரிசைப் பெற்ற இன்னொருவர் 2012 லிருந்து கிழக்குத் தீமோர் ஜனாதிபதியாக இருக்கும் ஜோசே ராமோஸ் ஹோர்ட்டா. நியூ யோர்க்கில் ஐ.நா -வின் பொதுச்சபைக் கூட்டங்களில் பங்குபற்றி வருகிறார். வத்திக்கான் இவ்விசாரணைகள் பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிவிக்க முன்னர் தான் எதையும் சொல்ல விரும்பவில்லை என்று அவர் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *