நேற்றுப் பிற்பகல் சுவீடனில் வேத்லாந்தா நகரில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் தீவிரவாதப் பின்னணியுடையதல்ல.

சுவீடனின் தென்பகுதியிலிருக்கும் வேத்லாந்தா என்ற நகரில் நேற்றுப் பிற்பகல் ஒருவன் வெவ்வேறு இடங்களில் வைத்துக் கண்ணில் பட்டவர்களைக் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. கத்தியால் குத்தியவனைப் பொலீசார் சுட்டுக் காயப்படுத்தி அவன் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

கண்ணில் பட்டவர்களைத் தாக்கிக் கொல்லும் இதே வகையிலான சம்பவங்கள் பல ஐரோப்பிய நகரங்களில் தீவிரவாதத் தாக்குதல்களாக நடந்திருப்பதால் இதுவும் அதே போன்றதே என்ற எண்ணம் பலரிடையேயும் பரவியது. உண்மை தெரியும்வரை அப்படியான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கும் வகையில் பொலீசார் ஆரம்பத்திலிருந்தே “இது தீவிரவாதக் குற்றமா என்றும் ஆராயப்படுகிறது,” என்று தெரிவித்து வந்தார்கள்.

தொடர்ந்த விசாரணையில் நடந்தது ஒரு தீவிரவாதத் தாக்குதல் நோக்குடன் நடக்கவில்லை என்று தெரியவருவதாகப் பொலீசார் தெரிவிக்கிறார்கள். நடந்த விபரங்கள் தமக்குத் தெரிய வந்திருப்பினும், விசாரணையை இரகசியமாக நடத்தும் நோக்குடன் தற்போது அவை வெளியிடப்படவில்லை.

தாக்கப்பட்டவர்களில் இருவரும், பொலீசாரால் சுடப்பட்ட குற்றவாளியும் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதைத்தவிர மேலுமிருவர் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சாள்ஸ் ஜெ.போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *