“நான் ஒருவேளை நாட்டோவுக்கான பின்லாந்தின் விண்ணப்பத்தை ஏற்று, சுவீடனை அதிரவைக்கக்கூடும்”, எர்டகான்.

நாட்டோ பாதுகாப்பு அமைப்பில் சேர்வதற்காக சுவீடனும், பின்லாந்தும் போட்டிருக்கும் விண்ணப்பங்கள் பற்றிய துருக்கிய அடாவடித்தனம் மேலும் சூடாகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று துருக்கிய ஜனாதிபதி எர்டகான் வெளியிட்டிருந்த செய்தியொன்றில், “நான் ஒருவேளை பின்லாந்து நாட்டோவில் சேர்வதை ஏற்றுக்கொள்வேன். அதன் மூலம் சுவீடனை அதிர்ச்சியடையச்செய்யக்கூடும்,” என்றிருந்தது. ஒரே எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் பின்லாந்தும், சுவீடனும் தாம் ஒரே நேரத்தில் அங்கத்துவராக விரும்புகிறார்கள்.

நாட்டோ அங்கத்துவராக புதிய நாடு சேரவேண்டுமானால் ஏற்கனவே இருக்கும் ஒவ்வொரு அங்கத்துவர்களும் சம்மதம் கொடுக்கவேண்டும் என்ற சட்ட வரிகளைத் துருக்கி பாவித்து தனது அதிகாரத்தைக் காட்டி வருகிறது. தனது செய்தியில் மீண்டும் தனது கோரிக்கையான, “சுவீடனில் வாழும் தீவிரவாதிகளான துருக்கியக் குடிமக்களை சுவீடன் எங்களிடம் ஒப்படைக்கவேண்டும்,” என்கிறார் எர்டகான். 

சுவீடனில் இருக்கும் நாட்டோ எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் துருக்கிக்கு எதிரான நடவடிக்கைகளைச் செய்வதில் ஈடுபட்டு வருகிறார்கள். துருக்கிய ஜனாதிபதி போன்ற பொம்மையைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டது, சுவீடன், டென்மார்க்கிலிருக்கும் துருக்கிய தூதுவராலயங்கள் முன்னால் குரானைக் கொழுத்துதல், கிழித்துப் போடல் போன்ற நடவடிக்கைகள் நடந்துவருகின்றன. இவைகளால் சூடேற்றப்பட்ட துருக்கிய இஸ்லாமிய, தேசியவாதி அமைப்புகள் துருக்கியில் சுவீடனுக்கெதிரான பிரச்சாரங்களைத் தூண்டிவிட்டு வருகின்றன. அங்கிருக்கும் சுவீடன் தூதுவராலயத்தின் முன்னால் சுவீடனின் தேசியக் கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்வதும் நடந்து வருகிறது.

இதனால் சுவீடன் அரசு, துருக்கிக்கு விஜயம் செய்யும், அங்கே வாழும் சுவீடிஷ்காரர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது. 

துருக்கியில் ஜூன் 18 ம் திகதி நடக்கவிருந்த தேர்தலை மே 14 ம் தேதிக்கு முன்போட்டிருக்கிறார் எர்டகான். இதுவே தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் என்று கூறியிருக்கும் அவர் தான் வென்றே ஆகவேண்டுமென்று உறுதி பூண்டிருக்கிறார். அதற்காகவே சர்வதேச அளவில் தனது முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்குக் காட்டவிரும்புகிறார் அவர். இந்த நிலையில் தமது நாட்டோ விண்ணப்பத்தைப் பின்வாங்கிக்கொள்ளுவது புத்திசாலித்தனமா என்ற சிந்தனை சுவீடனில் உண்டாகி வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *