பூவிக்கோளின் உள்ளிருக்கும் மைய அடுக்கான கருவத்தின் சுற்றும் திசை மாறிக்கொண்டிருக்கிறது.

புவிக்கோளின் உள் நோக்கிப் பிரிக்கும்போது அவை கண்ட ஓடு, கவசம், கருவம் என்று மூன்று பகுதிகளாகக் குறிப்பிடப்படுகிறது. மையத்திலிருக்கும் பகுதியான கருவம் வெளிக்கருவம், உட்கருவம் என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இவைகளில் வெளிக்கருவம் திரவ நிலையிலிருக்க, உட்கருவம் திட இரும்பினால் ஆனது. அதனால் உட்கருவம் வெளிக்கருவத்துடன் ஒட்டியிராமல் அதைவிட வேகமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அது இதுவரை சுற்றிக்கொண்டிருந்த வேகம் குறைந்திருப்பதாகவும் எனவே, அது சுற்றும் திசையை மாற்றிக்கொள்ளவிருக்கிறது என்றும் புவியியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்கான ஆதாரமாகச் சமீபகாலத்தில் வெளியான ஆராய்ச்சி விபரங்களை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

ஒரு திசையை நோக்கிச் சுற்றிக்கொண்டிருந்த திடமான பாகமாக இருக்கும் உட்கருவம் கடந்த பத்து வருடங்களாகத் தனது சுற்றலின் வேகத்தைக் குறைத்து அனேகமாக நிறுத்திக்கொண்டுவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நேச்சர் ஜியோசயன்ஸ் என்ற ஆராய்ச்சிச் சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் கட்டுரை மேற்கண்ட நிலைமையை விபரித்து, உட்கருவம் தான் சுற்றிக்கொண்டிருந்த திசையை மாற்றிக்கொள்ளலாம் என்று கணிக்கப்படுவதாகவும் விபரிக்கிறது.

சந்திரனோடு ஒப்பிடும்போது சுமார் 70 % அளவிலான உட்கருவம் மணிக்கூடு ஓடும் திசைக்கு எதிர்த்திசையில் சுற்றிக்கொண்டிருக்கிறது. புவிக்கோளும் தனது அச்சில் இருந்து அதே திசையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. சீனாவின் பீஜிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் விபரங்கள் 2009 இல் அது சுற்றுவதை நிறுத்திக்கொண்டு எதிர்ப்பக்கமாகச் சுற்ற ஆரம்பித்திருக்கிறது. அதாவது புவிக்கோளின் சுழற்சி ஒரு திசையை நோக்கியிருக்க உட்கருவத்தின் சுழற்சியானது எதிர்திசையாகியிருக்கிறது.

2003 இல் வெளிவந்த The Core என்ற சினிமா புவியின் உட்கருவம் திடீரென்று நின்றுவிட்டதால் புவியில் ஏற்படும் விளைவுகளைக் காட்டுகிறது. உட்கருவத்தின் திடீர் ஸ்தம்பிதத்தால் உலகெங்கும் பற்பல இயற்கை அழிவுகள் ஏற்படுவதாக அது சித்தரிக்கிறது. ஆனால், கடந்த 10 வருடங்களாக அதன் சுற்றுதல் நின்றிருப்பது உலகில் வாழ்பவர்களுக்குப் பெரியதாக எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லை என்கிறார்கள் புவியியல் வல்லுனர்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *