பக்கத்து நாடுகளை விடப் பின்லாந்தினரின் கல்வித்தகைமை குறைந்து வருகிறது.

பின்லாந்தின் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில்  பின்லாந்தின் கல்வித்தரம் பின்தங்கியிருக்கிறது. பின்லாந்தின் கல்வி நிலை குறித்த கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் புதிய அறிக்கை பின்லாந்து எங்கு செல்கிறது என்ற விமர்சனத்துக்குரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது. பின்லாந்து மக்களின் கல்வியறிவின் நிலை மற்றும் கல்வித்தகைமை  இரண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன, மேலும் சர்வதேச ஒப்பீடுகளில் பின்லாந்து முன்பு போல் சிறப்பாக செயல்படவில்லை. 

சர்வதேச ஒப்பீட்டில் OECD இன் புள்ளிவிவரங்களின்படி நோர்வேயின் கல்வி நிலைமை கணிசமாக முன்னேறியிருக்கிறது.  25-34 வயதுடைய இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பல்கலைக்கழக பட்டம் பெற்றுள்ளனர். சுவீடன், டென்மார்க் நாடுகளிலும் அவ்வயதுள்ளவர்களில் கிட்டத்தட்டப் பாதிப் பங்கினர் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். பின்லாந்தைவிட முன்னணியிலிருக்கும் இன்னொரு நாடு எஸ்த்தோனியாவாகும். 

OECD எனப்படும் பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் புள்ளிவிபரங்கள் பின்லாந்தின் 25 – 34 வயதுள்ளவர்களில் 40 விகிதமானவர்களே பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது. கல்வி நிலைமையில் பின்லாந்து OECD நாடுகளில் 29 இடத்திலிருப்பதைப் புதிய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 

60 சதவீத இளைஞர்கள் கல்வி பெறவேண்டும்,  கல்வி உயர்தரமாக இருக்கவேண்டும் என்பவை டென்மார்க்கின் குறிக்கோள்களாகும். அதை நிலைவில் வைத்து டென்மார்க்கின் கல்வித் திணைக்களம், பெரிய நகரங்களுக்கு வெளியே கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் முக்கியமாகக் கவனம் செலுத்தி வருகிறார்கள். டென்மார்க்கின் ஆட்சியாளர்கள் சர்வதேச அளவில் பாராட்டப்படும்  பின்லாந்தின் கல்விமுறையைக் கவனித்து தமது நாட்டின் கல்விமுறையைச் சீர்செய்வதில் ஈடுபட்டு வருகிறார்கள். 

எஸ்தோனியாவைப் பொறுத்தவரை 2002 இல் அந்த நாட்டின் 25 – 34 வயதுள்ளவர்களில் 26 விகிதமானவர்களே பல்கலைக்கழகக்கல்வியைப் பெற்றிருந்தார்கள். அந்த நிலைமை 2021 இல் 43 விகிதமாக அதாவது பின்லாந்தை விட 3 விகிதத்தால் அதிகமாகியிருக்கிறது. அந்த வயதுள்ளவர்களில் 45 விகிதத்தினராவது பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றிருக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் எஸ்தோனியா செயற்பட்டு வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *