பாதுகாப்புச் செலவை உயர்த்த, ஒரு விடுமுறை நாள் குறைக்கப்படுவதை எதிர்த்து டனிஷ்காரர்கள் குரலெழுப்புகிறார்கள்.

ஞாயிறன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்ஹேகனில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி நாட்டின் விடுமுறை நாட்களில் ஒன்றை அரசு குறைக்கத் திட்டமிட்டிருப்பதை எதிர்த்துக் குரலெழுப்பினார்கள். இயேசு உயிர்த்தெழுந்த நாள்\பாஸ்கு நாளின் பின்னர் வரும் நாலாவது வெள்ளிக்கிழமை டென்மார்க்கில் விடுமுறை நாளாகும். பிரதமர் மெத்தெ பிரெடெரிக்சன் டிசம்பர் மாதம் தனது அரசாங்கத்தை அறிமுகம் செய்தபோதே குறிப்பிட்ட விடுமுறை நாள்  2024 இல் வாபஸ் வாங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். 

பிரதமரின் அறிவிப்பை அடுத்து டென்மார்க்கில் அவ்விடுமுறை நாளை ரத்து செய்வதையெதிர்த்து வெவ்வேறு சாரார் குரலெழுப்பி வருகிறார்கள். நாட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் தமது பாதுகாப்புச் செலவுக்காக நாட்டின் பொருளாதார உற்பத்திப் பெறுமதியில் இரண்டு விகிதத்தைச் செலவிடவேண்டும் என்பது விதியாகும். 

அதை இதுவரை செய்யாத டென்மார்க் விடுமுறை நாளொன்றை ரத்துச் செய்து அதன் மூலம் உயர்த்தப்படும் பாதுகாப்புச் செலவை ஈடுகட்டவிருக்கிறது. சுமார் 4,5 பில்லியன் எவ்ரோக்களால் அதிகரிக்கவிருக்கும் பாதுகாப்புச் செலவின் பெரும்பகுதியைக் குறிப்பிட்ட விடுமுறை நாள் ரத்தின்போது அரசுக்குக் கிடைக்கும் வரிகள் மூலம் சம்பாதிக்க முடியும் என்று அரசு குறிப்பிடுகிறது.

“முக்கியமான வேண்டுதல் நாள்,” என்றழைக்கப்படும் குறிப்பிட்ட நாள் 1686 இல் அச்சமயத்தின் அதிமேற்றிராணியாரால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. விரதம் இருக்கவும், ஒரு முழு நாளை மக்கள் செபிப்பதற்காகச் செலவிடவும் அந்த நாள் விடுமுறை நாளாக்கப்பட்டது. கிறிஸ்தவ சமயத்தின் “உறுதிபூசுதல்” என்ற கடமையை நிறைவேற்ற அவ்வெள்ளியை அடுத்த விடுமுறை நாட்களிரண்டும் செலவிடப்படுகின்றன. அத்துடன் டனிஷ் மக்கள் தமது நாட்டின் பிரபல இனிப்பு ரொட்டி ஒன்றையும் அந்த நாளில் உண்டு கொண்டாடுவார்கள்.

ஞாயிறன்று நடந்த விடுமுறை நாள் ரத்தை எதிர்க்கும் கூட்டம் இதுவரை நடந்தவைகளில் பெரியதாகும். இதை டனிஷ் தொழிலாளர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. சுமார் 50,000 பேர் அக்கூட்டத்தில் இணைந்திருந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *