நாட்டோ அங்கத்துவ விண்ணப்பத்தை முடக்கும் துருக்கியும், சுவீடனில் நடந்த குரான் எதிர்ப்பும்.

நாட்டோ அமைப்பில் சேர நீண்ட காலமாக மறுத்துவந்த சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் சமீபத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவ்வமைப்பில் சேரும் விண்ணப்பத்தை முன்வைத்திருக்கின்றன. மற்றைய நாட்டோ அங்கத்துவ நாடுகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவ்விண்ணப்பத்தை மறுத்துவருகிறது துருக்கி. தனது அரசுக்கு எதிரானவர்கள், தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு சுவீடன், பின்லாந்தில் வாழும் 130 பேரைத் துருக்கியிடம் கையளிக்கும்படி ஒற்றைக்காலில் நின்று கோரிவருகிறார் நாட்டின் ஜனாதிபதி எர்டகான்.

எர்டகானின் வெளிவிவகார அமைச்சர் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருக்கிறார். அமெரிக்கா இதுவரை துருக்கிக்கு விற்க மறுத்துவரும் F16 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவே அவர் அங்கே சென்றிருந்தார். அமெரிக்கா அவ்விமானங்களைத் துருக்கிக்கு விற்கலாம் என்றும் பதிலாக துருக்கி நாட்டோ அமைப்பில் சுவீடன், பின்லாந்து நாடுகள் இணைவதற்குச் சம்மதம் தெரிவிக்கும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், அமெரிக்க, துருக்கிய வெளிவிவகார அமைச்சர்களின் பேச்சுவார்த்தையின் பின்னர், “அவ்விமானக் கொள்வனவுக்கும் சுவீடன், பின்லாந்து நாடுகளின் நாட்டோ அங்கத்துவத்துக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது,” துருக்கிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

துருக்கியின் நிலைப்பாடு இப்படியிருக்கும் சமயத்தில் சுவீடனின் நாட்டோ எதிர்ப்பாளர்களால் ஜனாதிபதி எர்டகான் பொம்மை ஒன்று தலைகீழாகத் தொங்கவிடப்பட்டது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டது போலக் கொதித்த துருக்கியத் தலைவர்கள் அதைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். சுவீடன் அரசியலமைப்புச் சட்டப்படி எதிர்ப்பைக் காட்டுவதற்காக அப்படியான நடவடிக்கைகள் எடுப்பது அனுமதிக்கப்படுகிறது.

அதையடுத்துச் சனியன்று டென்மார்க்கைச் சேர்ந்த நிறவாதி அரசியல்வாதி ராஸ்முஸ் பலுடான் ஸ்டொக்ஹோமிலிருக்கும் துருக்கியத் தூதுவராலயத்தின் முன்னால் குரான் பிரதியொன்றை எரித்து துருக்கிக்கு மேலும் கொதிப்பை உண்டாக்கினார். அதையடுத்து துருக்கியில் அவரது படங்களும், சுவீடன் தேசியக்கொடியும் எரிக்கப்பட்டன. பலுடானின் முன்னைய குரான் எரிப்புக்களைக் கண்டித்த முஸ்லீம் நாடுகள் இம்முறையும் அதற்கான அனுமதியைக் கொடுத்த சுவீடன் அரசை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன.

நாட்டோ அமைப்பில் சேரத் துருக்கியின் அனுமதியைப் பெறும் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் சுவீடன், பின்லாந்து நாட்டின் தலைவர்கள் தற்போது தமக்கும் துருக்கிக்கும் இடையேயான அரசியல் தொடர்புகள் மோசமாகி வருவதாகக் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். எர்டகான் பொம்மை எரிப்பு, குரான் எரிப்பு நடவடிக்கைகளை அடுத்து துருக்கியில் பேச்சுவார்த்தைகளுக்காக வரவேட்கப்பட்ட சுவீடன் பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தை துருக்கி நிறுத்தியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *