மற்றைய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதை நிறுத்தி வருகிறது சுவிஸ்.

கடந்த வருட நடுப்பகுதியில் டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகள் உக்ரேனுக்குக் கொடுக்க முன்வந்த ஆயுதங்களை நிறுத்தியிருந்தது சுவிற்சலாந்து. தற்போது ஸ்பெய்ன் தன்னிடமிருக்கும் வான்வெளி காக்கும் ஆயுதங்களை உக்ரேனுக்குக் கொடுக்க முன்வந்ததையும் சுவிற்சலாந்து தடுத்து நிறுத்தியிருக்கிறது. சுவிஸ் அதற்காகக் குறிப்பிடும் காரணம் தனது “அணிசேராத நாடு” என்ற நிலைப்பாடு ஆகும்.

உலகெங்கும் நடக்கும் சர்வதேச மாநாடுகளில் தொலைக்காட்சி மூலம் தோன்றித் தனது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதையும் அதை எதிர்கொள்ள தமக்கு உலக நாடுகள் முடிந்தளவு ஆயுதங்களைத் தரவேண்டுமென்றும் வேண்டுதலை முன்வைத்து வருகிறார் உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கி. அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் உட்படப் பல நாடுகளும் அவ்வுதவியைச் செய்து வருகின்றன. சமீபத்தில் செலென்ஸ்கி தமது பாதுகாப்புக்காக மட்டுமன்றி திருப்பித் தாக்குவதற்காகவும் தேவையான கனரக ஆயுதங்களையும் உதவியாக எதிர்ப்பார்க்கிறார். சுவிற்சலாந்தில் டாவோஸ் நகரில்  நடக்கும் வருடாந்தர சர்வதேச பொருளாதார மாநாட்டிலும் அவர் அக்கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

உக்ரேனுக்கு ஆயுதங்கள் கொடுக்க முன்வந்த பல நாடுகள் அவற்றைக் கொடுக்க விடாமல் முடக்கியிருக்கிறது சுவிஸ். பிரபல ஆயுதத் தயாரிப்பாளரான சுவிற்சலாந்தின் ஆயுதங்கள் பல நாடுகளிடம் இருக்கின்றன. அவைகளை அந்த நாடுகள் வேறொரு நாட்டுக்குக் கொடுப்பதானால் சுவிற்சலாந்திடம் அனுமதி பெறவேண்டும் என்ற ஒப்பந்த நிபந்தனையைப் பாவித்தே சுவிஸ் மற்றைய நாடுகள் உக்ரேனுக்கு உதவாமல் தடுத்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவை தம்மால் முடிந்தவரை உக்ரேனுக்கு உதவி வரும்போது சுவிற்சலாந்தின் நடவடிக்கை நியாயமானதா என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்திருக்கிறது. மற்ற நாடுகள் உதவ முற்படும்போது முட்டுக்கட்டை போடுவது, உக்ரேன் மீது தாக்கிவரும் ரஷ்யாவுக்குச் சாதகமாக அமையும்போது சுவிற்சலாந்து எடுத்திருக்கும் நிலைப்பாடு நியாயமானதா என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *