“உழவனுக்கு நன்றி” என்று status போடுவதை விட உழவனை கைதூக்கி விட முயற்சிக்க வேண்டும் | எழுதுவது வீமன்

தை மாதம் என்பது தமிழர் வாழ்வியலில் ஒரு முக்கியமான மாதமாகும். போகிப் பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கல் என்று தொடர்ந்து சூரியனுக்கு நன்றி கூறுதல், விவசாயியை வாழ்த்துதல், பசுக்களையும் காளைகளையும் போற்றுதல், விருந்தோம்பல் என்று தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஈழத்தில் தைப் பொங்கல் மிகச் சிறப்பாகவும் மாட்டுப் பொங்கல் சிலபகுதிகளிலும் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் இலங்கையின் வடக்கில் நடைபெறும் பட்டமேற்றும் விழாக்களும் தைப்பொங்கலோடு சேர்ந்த ஒரு கொண்டாட்டமாக இருந்து வருகிறது.

இந்தத் தைத்திருநாள் இலங்கை இந்தியா தவிர்த்து இன்று மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்கா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா என தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. தைத் திருநாளோடு வரும் அனைத்துக் கொண்டாட்டங்களும் ஒரு நிறைவை, முழுமையைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாக இருக்கின்றன.

சூரியனின் சக்தியே உலகின் இயக்கத்திற்கும் உலகில் உள்ள உயிர்கள் நிலைத்திருப்பதற்கும் ஆதாரமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக உழவுத் தொழில் புரிபவர்களுக்கு சூரியனின் சக்தி இன்றியமையாததாக இருக்கின்றது. இதனாலேயே உழவர்கள் தை மாதத்தில் தமது அறுவடையை சூரியனுக்கு சமர்ப்பணம் செய்கிறார்கள். இவ்வாறு சமர்ப்பணம் செய்து சூரியனுக்கு நன்றி சொல்லும் நிகழ்வாக தைப்பொங்கல் விழா அமைந்துள்ளது. அதைப் போலவே உழவர்கள் தமது தொழிலில் உற்ற நண்பனாக விளங்கிய காளைகளுக்கும் பசுக்களுக்கும் நன்றி சொல்லும் வகையில் மாட்டுப் பொங்கல் (அல்லது பட்டிப் பொங்கல் அமைந்துள்ளது).

உழவர் என்று சொல்லும்போது நாங்கள் அதை நிலவுடமையாளராக உள்ள உழவர்களுக்கு மட்டும் உரிய விழாவாகக் கருத வேண்டியதில்லை. விவசாய நிலங்களில் சம்பளத்திற்கு வேலை செய்வோர், விவசாயத்தோடு இணைந்த தொழில்களில் ஈடுபடுவோர் (மண்வெட்டி, அரிவாள் போன்றன செய்வோர், மாட்டுவண்டி, ஏர் போன்றவற்றைச் செய்பவர்கள்), விவசாய உற்பத்திப் பொருட்களை வாங்கி விற்கும் சிறுவியாபாரிகள் என உலகில் பல வகையான தொழிலாளர்கள் நீண்டகாலமாகக் கொண்டாடி வரும் மதச் சாயம் அற்ற ஒரு விழாவாகவும் தைப்பொங்கல் அமைந்துள்ளது.

நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் தைப்பொங்கல் என்பது எப்போதுமே பெரும் கொண்டாட்டத்துக்கு உரியதாகவே இருந்துள்ளது. அப்போது எங்களில் பலருக்கும் சொந்தமாக வயல்கள் இருந்தன. அவையெல்லாமே பயன்பாட்டில் இருந்தன. பல முழுநேர உழவர்களாக  இருந்தார்கள். அதேநேரம் ஏனைய பலர் அரச, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தாலும் பகுதிநேர உழவர்களாக இருந்தார்கள். உதாரணமாக பெரும் கல்விமான் என்று தமிழர்கள் கொண்டாடும் மறைந்த பேராசிரியர் துரைராஜா அவர்களும் தானே தனது வயலில் இறங்கி வேலை செய்யும் ஒருவராக இருந்தார். அவரைப் போலவே கொழும்பில் உயர் பதவிகள் வகித்த எனது ஊரவர் பலரும் பருவ காலங்களில் தமது ஊருக்கு வந்து விவசாயம் செய்பவர்களாகத்தான் இருந்தார்கள்.

ஆனாலும் காலப் போக்கில் உள்நாட்டு யுத்தம் எங்கள் காலத்தை கபளீகரம் செய்ததில் கொண்டாட்டமும் குறைந்து விட்டது. வளமான நிலப்பகுதிகளைப் போர் தின்று போக மண்ணில் எஞ்சியவர்களுள் விவசாயம் செய்பவர்களும் குறைந்து விட்டார்கள்.  

எண்பதுகளின் பின்னர் இடபெயர்வுகள் (தற்காலிக மற்றும் நிரந்த) ஒருபுறம், விவசாயத்திற்கான உள்ளீடுகளுக்கான செலவுகள் தொடர்ந்தும் அதிகரித்துச் சென்றமை, பொருளாதாரத் தடைகள் காரணமாக விவசாய உள்ளீடுகள் கிடைக்காமை, விவசாயச் செலவுகளுக்காக தனியாரிடம் கடன் வாங்கி மீளமுடியாத கடன் சுழலுக்குள் பல விவசாயிகள் மாட்டிக் கொண்டமை, உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமை எனப் பல காரணங்கள் தாயக மண்ணில் பலர் விவசாயத்தைப் படிப்படியாகக் கைவிடக் காரணமாக அமைந்தது.

இன்று தமிழர் தாயகப் பிரதேசங்களில் உழவுத் தொழில் நலிந்து போனதற்கு புலம் பெயர் தேசத்து பணம் கண்டபடி ஈழத்தில் புழக்கத்தில் விடப்பட்டதுதான் காரணம் என்று சிலர் குற்றம் சுமத்தினாலும் அது மட்டுமே காரணம் அல்ல.  ஈழத்தில் வாழும் தமிழர்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் சிலர் விவசாய நிலங்களை முற்றாக கைவிடுவதற்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும் ஒருகாலத்தில் தமிழ் மக்களின் கணிசமான சனத்தொகையின் வாழ்வாதாரமாக இருந்த உழவுத் தொழில் இன்று உழவர்களுக்கு வருமானத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஒன்றாக இல்லை என்பதுதான் யதார்த்தம். இதுவே பல குடும்பங்கள் படியாக உழவுத் தொழிலை கைவிட அல்லது பயிர் செய்யும் அளவைக் குறைத்துக் கொள்ளப் பிரதான காரணமாக அமைந்துவிட்டது.

உண்மையில் விவசாயப் பொருட்களுக்கு சரியான சந்தை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டால் விவசாயமும் இலாபம் தரக்கூடிய தொழில்தான். ஆனால், காலம் காலமாக அரசின் முட்டாள்தனமான கொள்கைகளும் விவசாயிகளின் வயிற்றில் அடித்துப் பிழைக்கும் இடைத் தரகர்களும், வட்டிக்குக் கடன் கொடுத்து இரத்தம் உறுஞ்சும் பணமுதலைகளுமே உழவுத் தொழிலை இப்படி வைத்திருக்கிறார்கள்.

எங்களில் பலருக்கு இவையெல்லாம் தெரியாமல் இல்லை. உழவர்களிடமே நேரடியாக உற்பத்திப் பொருட்களை வாங்கினால் இலாபம் அவர்களுக்கே போய்ச்சேரும் என்ற விடயமும் தெரியும். ஆனால் நாங்கள் அதைச் செய்ய மாட்டோம். எவனோ ஒருவன் உழவர்களிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி அதற்கு பலமடங்கு விலை வைத்து எமது வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்து தரும்போது மறுபேச்சு பேசாமல் அதை சந்தோசமாக வாங்கிச் செல்வோம்.

அதுவே உழவர்கள் நேரடியாக சந்தைப்படுத்த முனைந்தால் சந்தோசமாக அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட மாட்டோம். அவர்களோடு சளைக்காமல் பேரம் பேசுவோம். ஆனால் வீட்டுக்குள் வந்தவுடன், “விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும்” என்றும்  “விவசாயிகள் எங்களுக்குச் சோறு போடும் தெய்வங்கள்” என்றும் status உம் போட்டு வாழ்க விவசாயி என்று சமூக வலைத்தளங்களில் பொங்கலும் வைப்போம். இந்த அளவில்தான் எங்களில் பலரின் சமூக அக்கறையும் பொறுப்பும் இருக்கிறது. இப்படி உழவுத் தொழிலை romanticize பண்ணுவதால்தானோ என்னவோ இப்போது சிலர் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் உழவர் நன்றி சொல்லும் விழாவை உழவருக்கு நன்றி என்று கொண்டாடத் தலைப்பட்டுள்ளார்கள்.

உண்மையில் உழவருக்கு நாம் நன்றி சொல்ல விரும்பினால், எங்களால் முடிந்தவகையில் உழவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். நாங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் உழவுத் தொழிலைப் புனிதப்படுத்துவதையும் romanticize பண்ணுவதையும் விடுத்து, எங்களால் முடிந்த வகையில் எமது சூழலில் வாழும் உழவர்களிடம் நியாய விலைக்கு பொருட்களை வாங்கி, அல்லது அவர்களின் உற்பத்திப் பொருட்களை நியாய விலைக்கு விற்பதற்கு உதவி, அவர்கள் தமது வாழ்வில் எதிர்கொள்ளும் சிரமங்களை இல்லாது செய்ய முயற்சிப்போமானால் அதுவே சிறப்பான உழவர் திருநாள் கொண்டாட்டமாக அமையும்.

உழவனுக்கு நன்றி என்று status போடுவதை நிறுத்திவிட்டு உழவனைக் கைதூக்கி விடுங்கள். அவன் சூரியனுக்கு நன்றி சொல்வதோடு உங்களுக்கும் மனதார நன்றி சொல்வான்.

மற்றவரை வாழ்த்துவதைவிட முக்கியமானது எங்களால் முடிந்தவரை மற்றவர்களையும் வாழவைப்பது. அவர்களின் வாழ்வில் துன்பங்கள் நீங்கும்போது எமது வாழ்வும் நிறைவடையும். இந்தத் தைப்பொங்கல் நாளில் அனைவரையும் வாழ்த்துவோம்! வாழ வைப்போம் !

-வீமன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *