இயற்கை அழிவுகள், அரசியல் மோதல்களால் சிதறுண்டிருக்கும் ஹைத்திக்கு உதவ முயலும் கனடா.

கடந்த பல வருடங்களாக அடுக்கடுக்காகத் தாக்கிய இயற்கை அழிவுகளான சூறாவளி,  புயல், வெள்ளம் போன்றவைகளால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு ஹைத்தி. அதே சமயம் அரசியல்வாதிகளிடையேயான குழிபறிப்புகள், வீதிகளில் வெவ்வேறு ஆயுதக்குழுக்களின் அராஜகம் ஆகியவையும் அந்த நாட்டு மக்களைப் பெருமளவு பாதித்து வருகிறது. ஹைத்திக்கு உதவ வரும்படி சர்வதேசத்தை நோக்கி ஐ.நா சபை பல தடவைகள் வேண்டியிருந்தது.

ஜூலை 2021 இல் நாட்டின் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்ட பின்னர் நாட்டைத் தமது பயங்கரவாத ஆட்சிக்குத் தளமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள் சில வசதிபடைத்த ஆயுதக்குழுக்கள். தமது நாட்டுக்கு உதவுவதற்காக ஆயுதப்படையொன்றை அனுப்பி அதிகாரத்தைக் கைப்பற்றும்படி சர்வதேசத்திடம் நாட்டின் பிரதமராக இயங்கிவரும் ஏரியல் ஹென்றி வேண்டுகோள் விடுத்துப் பல மாதங்களாகிறது. எந்த ஒரு நாடும் அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை.

ஹைத்திக்கு வெவ்வேறு வழிகளில் உதவ முன்வந்திருக்கும் நாடுகளில் முக்கியமான ஒன்று கனடாவாகும். ஹைத்தியின் ஊழல் அரசியல்வாதிகள் மீது முடக்கங்களையும், தடைகளையும் போட்டிருக்கும் கனடா தனது ஆயுதப் படைகளையும் ஹைத்திக்கு அனுப்பியிருக்கிறது. ஹைத்தியில் நிலவும் அராஜக நிலைமையை எதிர்கொள்ளுமளவுக்குப் பலமான இராணுவத்தைக் கனடா அங்கே அனுப்பியிருக்கிறதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஹைத்தியில் நிலைமை மேலும் மோசமாகுமானால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய திட்டங்களை அமெரிக்காவுடனும், மற்ற நாடுகளுடனும் சேர்ந்து சிந்தித்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் டுருடூ பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அமெரிக்காவுடன் சேர்ந்து உதவவே கனடா விரும்புவதாக இரண்டு நாடுகளும் கூட்டுச்சேர்ந்து வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

ஹைத்தியின் கட்டுப்பாட்டைத் தமது அராஜக நடவடிக்கைகளின் கீழ் வைத்திருக்கும் குழுக்களை எதிர்கொள்ள நாட்டின் பொலீசாருக்கு உதவுவதிலேயே கனடா, அமெரிக்காவுடன் சேர்ந்து உதவி வருகிறது. அவ்விரண்டு நாடுகளாலும் அனுப்பப்பட்ட படையினர் தமது இராணுவத் தளபாடங்களுடன் ஹைத்தியின் பொலீஸ் படைக்கு உதவிக் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் நாட்டின் எரிசக்திப் பங்கீட்டை ஓரளவு ஒழுங்குசெய்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *