பாகிஸ்தான், பேஷாவர் நகரப் பள்ளிவாசலில் வெடித்தது குண்டு, 90 க்கும் அதிகமானோர் பலி.

வடமேற்குப் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே பேஷாவர் நகரின் பள்ளிவாசலில் குண்டு வெடித்ததில் சுமார் 90 பேர் இறந்திருக்கிறார்கள். பிற்பகல் நேரத்துத் தொழுகைக்காக விசுவாசிகள் கூடியிருந்த சமயத்தில் குண்டு வெடித்தபோது சுமார் 150 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. பாலமொன்றில் பேருந்து விபத்து அதையடுத்து படகொன்றில் சென்ற பிள்ளைகள் சுமார் 10 பேர் இறந்த விபத்தையடுத்து மேலுமொரு அழிவைப் பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முஹம்மது பின் ஸாகித் அல் நஹ்யான் அருகிலிருக்கும் இஸ்லாமாபாத் நகருக்கு விஜயம் செய்ய முன்னர் இந்தத் தாக்குதல் பேஷாவரில் நடந்திருக்கிறது. காலநிலை காரணமாக அல் – நஹ்யான் விஜயம் கடைசி நிமிடத்தில் தள்ளிப்போடப்பட்டிருந்தது.

குண்டு வெடித்த பள்ளிவாசல் பேஷாவர் நகரின் தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் அதிரடிப்படை, பிராந்திய ஆளுமை அதிகாரம் உட்பட்ட  முக்கிய அதிகார மையங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கிறது. பொலீசார் வாழும் பிரத்தியேக பகுதியும், மிகவும் பாதுகாப்பான பகுதியென்று கருதப்படும் அப்பிராந்தியத்தில் பள்ளிவாசல் தாக்கப்பட்டது பலரையும் அதிரவைத்திருக்கிறது. கட்டட இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கிக்கொண்டிருப்பதால் அவர்களை வெளியேற்றும் முயற்சிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறார்கள்.

பேஷாவர் நகரில் மார்ச் மாதத்தில் ஒரு பள்ளிவாசலில் வெடித்த குண்டால் 64 பேர் இறந்திருந்தனர். 2018 ம் ஆண்டுக்குப் பின்னரான மோசமான தீவிரவாதத் தாக்குதல் அதுவே. ஆப்கானிஸ்தானுக்கு அருகேயிருக்கும் பாகிஸ்தானின் தென்மேற்குப் பிராந்தியம் பல வருடங்களாகவே ஐ.எஸ், பாகிஸ்தான் தலிபான்கள் போன்ற தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் பாகிஸ்தானில் நடக்கும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் 50 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. அவைகளில் பெரும்பாலானவை மேற்குப் பகுதியிலேயே நடந்திருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *