பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டில் கலந்துகொள்ள உக்ரேன் மறுக்கலாம் என்று அறிவிப்பு.

ரஷ்ய, பெலாரூஸ் விளையாட்டு வீரர்களைச் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு பாரிஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்குமானால் அவ்விளையாட்டுகளை உக்ரேன் புறக்கணிக்கக்கூடும் என்று உக்ரேன் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார். ரஷ்யாவும், பெலாரூஸும் தமது நாட்டுக்கெதிரான போரில் ஈடுபட்டிருக்கும்வரை அவ்விளையாட்டு வீரர்களுடன் தாம் விளையாட்டுகளில் பங்கெடுக்கப்போவதில்லை என்று அமைச்சர் வடீம் குத்செய்த் கூறினார். 

ஆசிய ஒலிம்பிக் அமைப்பு இவ்வார நடுப்பகுதியில் எடுத்த முடிவுப்படி சீனாவில் இவ்வருடப் பிற்பகுதியில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய, பெலாரூஸ் விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுவார்கள். 2024 இல் பாரிஸ் நகரில் நடக்கவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிடுவதற்கான முதல் கட்டம் இதுவாகும்.

உக்ரேன் ஒலிம்பிக் அமைப்பின் தலைவராகவும் இருக்கும் குத்செய்த், “ரஷ்ய, பெலாரூஸ் நாட்டு வீரர்களைச் சர்வதேச விளையாட்டுகளில் புறக்கணிப்புச் செய்யும் நடவடிக்கையை அதிகரிப்பதற்கு நாம் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். இச்சமயத்தில் எங்கள் குரலைப் புறக்கணித்தால் நாம் பாரிஸில் நடக்கவிருக்கும் போட்டிகளில் பங்குபற்றுவதைத் தவிர்க்கும் முடிவை எடுக்கக்கூடும்,” என்று கூறினார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பித்தவுடன் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு ரஷ்யாவையும், அதற்கு வெளிப்படையாக ஆதரவைத் தெரிவிக்கும் பெலாரூஸையும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலக்கும் முடிவை எடுத்திருந்தது. ஆனால், இவ்வாரத்தில் அவ்வமைப்பு  விளையாட்டு என்பது உலக நாடுகளிடையே சமாதானத்தை ஏற்படுத்தும் வல்லமையுள்ளது என்று குறிப்பிட்டு அவ்விரு நாடுகளையும் பாரிஸ் 2024 இல் விளையாட அனுமதிக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *