ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற பெலாரூஸ், ரஷ்யர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

ரஷ்யா, பெலாரூஸ் நாட்டு விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காகக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது ஆசியாவுக்கான ஒலிம்பிக் சம்மேளனம். 2024 இல் பாரிஸ் நகரில் நடக்கவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிடுவதற்கான முதல் கட்டம் இதுவாகும். அவ்விரண்டு நாட்டின் வீரர்கள் கட்டுப்பாடான மேற்பார்வையுடன் போட்டிகளில் பங்குபற்றுவதன் மூலம் சர்வதேசப் போட்டிகளில் அவர்களை அனுமதிக்கும் முடிவு எடுக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

“விளையாட்டு வீரர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எந்தக் கடவுச்சீட்டை வைத்திருக்கிறார்கள் என்ற வித்தியாசமில்லாமல் விளையாட்டுப் போட்டிகளில் அவர்களுடைய நேர்மையான பங்கெடுப்பு உலகை ஒன்றுபடுத்தும் சக்தியுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு நம்புகிறது. அதனால் நாம் ரஷ்ய, பெலாரூசிய விளையாட்டு வீரர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறோம்,” என்று சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

சீனாவின் ஹாங்ஷூ நகரில் நடடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அவ்விரண்டு நாட்டு வீரர்கள் பாரிஸ் 2024 இல் பங்குபற்றும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்கலாம்.  கொரோனாக் கட்டுப்பாடுகளால் கடந்த வருடம் நடக்கவிருந்த The Hangzhou Asian Games இவ்வருடம் செப்டெம்பர் 23 ம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *