நாட்டின் அரசியல்வாதிகளுகாக ரஷ்யப் பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கும் புதிய சட்டங்கள்!

தற்போதைய ஜனாதிபதி விரும்பினால் மேலும் இரண்டு தவணைகள் [6+6] ஜனாதிபதி பதவியில் இருக்கலாம். ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் எக்குற்றங்களிலும் தண்டிக்கப்படாமலிருக்கும் முன்கூட்டிய மன்னிப்பு வழங்கப்படும்.

ஜனாதிபதி புத்தினின் தற்போதைய பதவிக்காலம் 2024 உடன் முடிவடைகிறது. அவர் மீண்டும் பதவியில் தொடர விரும்புவாரா இல்லையா என்பது பற்றிய சர்ச்சைகள் நடந்துவருகின்றன. புத்தின் அறுதியாகத் தனது முடிவை இதுவரை அறிவிக்கவில்லை. தனது பதவிக்காலம் முடியும்போது 72 வயதாகியிருக்கும் புத்தின் அரசியலிலிருந்து விலகிவிடுவாரென்றே பல அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். 

இதற்கிடையில், இவ்வருட நடுப்பகுதியில் ரஷ்யாவின் புதிய அரசியலமைப்புச் சட்ட மாற்றங்களை முன்வைத்து மக்களிடம் வாக்கெடுக்கப்பட்டது. அச்சட்ட மாற்றங்கள் இப்போது பாராளுமன்றங்களின் இரண்டு சபைகளும் ஏற்றுக்கொண்டபின் புத்தினின் கையெழுத்துக்காகக் காத்திருக்கின்றன.

அந்தச் சம்பிரதாயரீதியான கையெழுத்துக்கள் போடப்படும்போது புத்தின் மேலும் அதிக அதிகாரங்களைத் தற்போதைக்கு மட்டுமன்றி தனது வாழ்நாள் முழுவதற்கும் பெற்றிருப்பார். ஏற்கனவே இருக்கும் சட்டங்களின்படி ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் செய்த எந்தக் காரியத்துக்காகவும் எதிர்காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாகாது.

புதியதாக மாற்றப்பட்டிருக்கும் சட்டங்களோ தற்போதைய ஜனாதிபதி தன் வாழ்நாள் முழுவதுமே குற்றங்கள் எதுவும் சாட்டப்படாமல், எதற்காகவும் விசாரிக்கப்படாமல், எதற்காகவும் அவரிடம் தேடுதல்கள் நடாத்தப்படாமல், எதற்காகவும் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படாமலுமிருக்கும் உரிமையைக் கொடுக்கிறது. அது மட்டுமன்றி தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகளை எதிர்காலத்தில் மாற்றப்படும் சட்டங்களால் மீண்டும் எடுத்துக்கொள்ளவும் முடியாத அளவுக்கு வல்லமையைக் கொடுக்கிறது. 

மேலுமொரு சட்டத் திருத்தம் ரஷ்யாவின் நீதிசம்பந்தமான சேவைகள், உளவுத்துறை, காவல்துறை போன்றவைகளில் இருப்பவர்களின் அடையாளங்கள் எவற்றையும் வெளிப்படுத்தலாகாது என்றும் அவைகளை வெளிப்படுத்துதல் குற்றம் என்றும் குறிப்பிடுகிறது.     சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *