வெளிநாட்டுக் கடன்களுக்கான 100 மில்லியன் டொலர்கள் வட்டியை ரஷ்யா இன்று கொடுக்குமா அல்லது திவாலாகுமா?

மார்ச் 16 ம் திகதியன்று ரஷ்யா தனது ஒரு பகுதி வெளிநாட்டுக் கடன்களுக்கான 100 மில்லியன் டொலர்கள் வட்டியை அடைக்கவேண்டிய கடைசி நாள். அந்தத் தொகையைக் கொடுக்கும் வசதி தற்போது ரஷ்யாவிடம் இல்லையென்றும் அதனால் அவர்கள் அதை ஒத்திவைப்பார்கள் என்றும் சர்வதேச பொருளாதார அவதானிகள் கணிக்கிறார்கள். அது உண்மையாகும் பட்சத்தில் ரஷ்யா திவாலாகிப்போகும் கட்டத்தை நெருங்கும் என்கிறார்கள் அவர்கள்.

வட்டியாகக் கொடுக்கவேண்டிய குறிப்பிட்ட 100 மில்லியன் டொலரைக் கொடுத்துவிடுவோம் என்று ரஷ்ய அதிபர் குறிப்பிட்டிருந்தார். கடன் பத்திரங்களில் டொலர் நாணயத்தில் தான் அத்தொகை அடைக்கப்படவேண்டும் என்றிருக்கிறது. புத்தின் அவற்றை ரஷ்ய ரூபிளில் கொடுப்பதாகவே குறிப்பிட்டிருக்கிறார். 

ரஷ்ய வர்த்தக அமைச்சர் அண்டன் சிலுவானோவும் ஞாயிறன்று, “நட்பில்லாத நாடுகளுக்குக் கொடுக்கவேண்டிய கடனை நாம் ரூபிளில் கொடுப்போம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்ய மத்திய வங்கியின் வெளிநாட்டுச் சொத்துக்கள் 315 பில்லியன் டொலர்கள் ரஷ்யாவுக்கு வெளியே முடக்கப்பட்டிருப்பதால் ரஷ்யாவால் அதைப் பாவிக்க இயலாது. வங்கிகளுக்கிடையேயான நாணயப் பரிமாற்றங்களுக்கான Swift  அமைப்பிலிருந்து ரஷ்யா தூக்கியெறியப்பட்டிருப்பதும் அவர்கள் அத்தொகையைத் திருப்பிக்கொடுக்கச் சிக்கலை உண்டாக்கும். 

காலக்கெடுவான புதன் கிழமையன்று ரஷ்யா அத்தொகையைக் கொடுக்காவிடில் மேலும் 30 நாட்கள் கெடு கொடுக்கப்படும். ரூபிள் நாணயத்தில் கொடுக்க முயற்சிக்கும் பட்சத்தில் அது ஒப்பந்தத்தை மீறுவதால், சர்வதேச ரீதியில் ரஷ்யாவின் பொருளாதாரத்தின் தரம் இறக்கப்படும். மீண்டும் ரஷ்யா வெளியே கடன் வாங்க முடியாத நிலைமை ஏற்படும்.

ரஷ்ய அரசு அந்த திவாலாகும் நிலையை நெருங்குமானால் அது, ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகளையும் திருப்பித் தாக்கும். சர்வதேச வங்கிகளில் ரஷ்யாவின் உரிமை சுமார் 121 பில்லியன் டொலர்கள் வரை இருக்கிறது. ரஷ்யாவின் பொருளாதார தரம் இறங்கும் பட்சத்தில் அவ்வங்கிகளுக்கும் தமது வர்த்தகப் பரிமாறல்களில் தடங்கல் ஏற்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *