ஆர்ஜென்ரீனாவுக்குப் பறந்துசென்று பிள்ளை பெறுகிறார்கள் ரஷ்யக் கர்ப்பிணிகள்.

பணக்கார ரஷ்யக் கர்ப்பிணிப் பெண்கள் ஆர்ஜென்ரீனாவுக்கு விமானத்தில் பயணம் செய்து அங்கே தமது பிரசவத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார்கள். கடந்த வருடத்தில் அப்படியான பிரயாணத்தைச் செய்தவர்கள் 10,000 க்கும் அதிகமான ரஷ்யப் பெண்கள் என்று புள்ளிவிபரங்களை வெளியிட்டிருக்கிறது ஆர்ஜென்ரீனா. 

தமது கர்ப்பச்சமயம் சுமார் 32 வது வாரத்தை நெருங்கும்போது அப்பெண்கள் அர்ஜென்ரீனாவை வந்தடைகிறார்கள். அவர்களின் விமானப்பயணமும், பிரசவமும் மிக வெற்றிகரமான வியாபாரமாக நடந்துவருகிறது. பிரசவமானதும் முடிந்தளவு விரைவில் அப்பெண்கள் ரஷ்யாவுக்குத் திரும்பிவிடுகிறார்கள். “அவர்கள் சுற்றுப்பிரயாணம் செய்ய வருபவர்களல்ல என்று தெரிந்தும் அவர்களைத் தடுக்க இயலவில்லை,” என்று நேர்காணலொன்றில் அது ஒரு பிரச்சினையாகியிருப்பதாகக் குறிப்பிடுகிறார் நாட்டின் குடிவரவு, குடியேற்றத் திணைக்களத்தின் தலைவர் புளோரென்சினா கரினானோ.

ஆர்ஜென்ரீனாவில் பிறக்கும் பிள்ளையொன்று உடனடியாக ஆர்ஜென்ரீனாவின் குடிமகன் அந்தஸ்தைப் பெறுகிறது என்பதே ரஷ்யக் கர்ப்பிணிகளின் அந்தப் படையெடுப்புக்குக் காரணம். நாடு திரும்ப முன்னர் அந்த ரஷ்யப் பெண்கள் தமது குழந்தைக்கான ஆர்ஜென்ரீனக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அதன் பின்னர் தங்களுக்காகவும் ஆர்ஜென்ரீனா குடிமகள் அந்தஸ்தைக் கோருகிறார்கள். ஆர்ஜென்ரீனாவின் கடவுச்சீட்டுடன் ஒருவர் உலகின் 171 நாடுகளுக்குத் தடையின்றிப் பயணிக்கலாம் என்பதே இந்த பிரசவ வியாபாரத்துக்குக் காரணமாகும். ஒரு விரும்பத்தகாத வியாபாரமாகிவிட்ட அதை நிறுத்த விரும்புகிறது ஆர்ஜென்ரீனா. தமது நாட்டின் குடியுரிமை வியாபாராமாகுவதை அவர்கள் விரும்பவில்லை என்கிறார் புளோரென்சினா கரினானோ.

ஆர்ஜென்ரீனாவுக்கான கர்ப்பப் பயணத்துக்காக 20,000 டொலர்கள் வரை அறவிடப்படுகிறது. ரஷ்ய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை இருப்பதால் குழந்தையின் தாய்மார் மட்டுமே பயணத்தை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கான தங்குமிடம் உட்பட்ட மற்றைய வசதிகளைச் செய்வதும் ஆர்ஜென்ரீனாவில் தனியான ஒரு வியாபாரமாக இருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *