ஆபிரிக்க நாடுகளிடையே பயணித்து ரஷ்யாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தேடும் செர்கெய் லவ்ரோவ்.

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் ஆபிரிக்க நாடுகளிடையே ஒரு ராஜதந்திரச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார். தனது பயணத்தின் ஒரு புள்ளியாக எகிப்தை அடைந்திருக்கும் அவர் அந்நாட்டின் ஜனாதிபதியையும் வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்தார். சர்வதேச ரீதியில் உறைந்துபோயிருக்கும் ரஷ்யாவின் தொடர்புகளில் மென்மையான திறப்பை எதிர்பார்த்தே அவர் செயற்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் பேசிய அவர் ஒரு ராஜதந்திர, அரசியல் மாற்றத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.

அராபியக் கூட்டமைப்பின் தலைவரான அஹமத் அபூல் கெய்த்தையும் அவர் எகிப்தில் சந்திக்கவிருக்கிறார். நீண்டகாலமாகவே ரஷ்யாவுக்கும், எகிப்துக்கும் நெருங்கிய கூட்டுறவு உண்டு. எகிப்துக்குக் கோதுமை மற்றும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடு ரஷ்யா. அத்துடன் எகிப்தின் சுற்றுலாப்பயணிகளில் ரஷ்யர்கள் கணிசமான பகுதியினராகும். எகிப்திய ஜனாதிபதி அல்-சிசியும், புத்தினும் நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. சமீபத்தில் ரஷ்யா எகிப்தில் நான்கு அணுசக்தி மின்சார நிலையங்களை நிறுவி வரும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

பல ஆபிரிக்க நாடுகள் ரஷ்ய – உக்ரேன் போரால் தமது அவசிய தேவைக்கான தானியங்களைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றன. அந்த நாடுகளுக்கான சுமார் 40 % தானியங்கள் ரஷ்யா, உக்ரேன் நாடுகளிலிருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றன. எகிப்துக்கான கோதுமையையைத் தொடர்ந்து ரஷ்யா கொடுத்து வருகிறது, அதைத் தொடரவிருப்பதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.

தனது எகிப்தியச் சுற்றுப்பயணத்தின் முன்னர் அமைச்சர் லவ்ரோவ் வெளியிட்ட செய்தியொன்றில் ஆபிரிக்க நாடுகள் சுயமான வழியொன்றில் பயணிப்பதைப் போற்றியிருந்தார். அவர்கள் காலனித்துவ நாடுகளுக்கு அடிபணியாமல் ரஷ்ய – உக்ரேன் போரில் நடுநிலைமையாக இருப்பதை அவர் சிலாகித்திருந்தார். மேற்கு நாடுகளின் மிரட்டலுக்கு அடிபணியாமல் ஆபிரிக்க நாடுகள் ரஷ்யாவின் பக்கம் சாரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆபிரிக்க நாடுகள் பலவும் உள்நாட்டில் பல அரசியல் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருபவை. தமது நிலையில் எந்த அணியில் சார்ந்தாலும் அது தமக்கு அழிவாக முடியலாம் என்பதைப் பல ஆபிரிக்கச் சர்வாதிகார அரசுகளும் புரிந்துகொண்டுள்ளன. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் உணவுப்பொருட்கள், எரிபொருட்களின் கடும் விலையுயர்வுகள் அந்த நாடுகளின் மக்களிடையே கொந்தளிப்பை மேலும் உயர்த்துவதை அவர்கள் விரும்பவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *