“ரஷ்யா மீது தற்போது பொருளாதாரத் தடைகள் விதிப்பது தவறான நகர்வு,” என்கிறார் பிளிங்கன்.

உக்ரேன் அரசியல் நிலைமையால், மேற்கு நாடுகள் – ரஷ்ய உறவுகள் பற்றிய புதிய நகர்வுகள் ஞாயிறன்று வெளியாகின. அமெரிக்க வெளியுறவு அமைச்சு உக்ரேனிலிருக்கும் தனது ராஜதந்திரிகளின் குடும்பத்தினரை உடனடியாக அமெரிக்காவுக்குத் திரும்பும்படி கேட்டுக்கொண்டது. அதேசமயம், பல தடவைகள் எச்சரித்தபடி அமெரிக்கா தற்போது ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்காது என்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளிங்கன் தெரிவித்தார். 

அமெரிக்காவின் மேற்கண்ட நிலைப்பாட்டு மாற்றத்துக்குக் காரணம் ஜேர்மனியப் பிரதமர் ஒலொவ் ஷுல்ட்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது. அதை மறுத்த ஷுல்ட்ஸ் அமெரிக்காவும், ஐரோப்பாவும் ரஷ்யாவின் மிரட்டல் நடவடிக்கைகளை ஒரே விதமாகக் கையாளவேண்டும் என்று குறிப்பிட்டார். 

“ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை இப்போதே போடுவது மூலம் அவர்கள் உக்ரேனை ஆக்கிரமித்தால் நாம் எடுக்கப்போகும் கடுமையான நிலைப்பாடு பற்றி எச்சரிக்க முடியாமல் போகும்,” என்று அண்டனி பிளிங்கன் தெரிவித்தார். 

கயிற்றின் மீது நடப்பது போல ரஷ்யாவுடன் தனது உறவுகளைப் பேணி வரும் நாடு ஜேர்மனி. அதன் காரணங்களிலொன்றாக அவர்கள் தமது எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யும் இயற்கை வாயுவில் தங்கியிருப்பதைக் குறிப்பிடலாம். உக்ரேனுக்கு நாட்டோவில் அங்கத்துவம் கொடுக்கலாகாது என்ற ரஷ்யாவின் கோரிக்கைக்கு ஒத்துக்கொள்ள ஒலொவ் ஷுல்ட்ஸ் திட்டவட்டமாக மறுத்தார்.

ஐரோப்பாவுக்குத் தனது இயற்கை வாயுவை விற்பதற்கான மிகப் பெரும் திட்டத்துக்கான குளாய்த்தொடர்புகளை நிறுவுவதில் மும்முரமாக இருக்கிறது ரஷ்யா. பால்டிக் கடலுக்குக் கீழே நிறுவப்படும் அக்குளாய்கள் ஜேர்மனியூடாகவும் செல்கின்றன. உக்ரேனை ரஷ்யா கைப்பற்றும் பட்சத்தில் அத்திட்டத்தை முடக்குவதாக ஜேர்மனிய அரசும், ஐரோப்பிய ஒன்றியமும் மிரட்டி வருகின்றன. 

இதே சமயம், ரஷ்ய அரசு உக்ரேனில் ஆட்சியைக் கவிழ்த்துத் ரஷ்ய ஆதரவுத் தலைவரொருவரைப் பிரதமராக நியமிக்கும் திட்டத்திலிருப்பதாக ஐக்கிய ராச்சியம் எச்சரித்தது. தமது உளவுத் துறைக்கு அந்த விபரங்கள் கிடைத்திருப்பதாக லண்டனிலிருந்து வெளியாகிய அந்த எச்சரிக்கை பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. ரஷ்யப் படைகள் உக்ரேனுக்குள் நுழைந்து நாட்டைக் கைப்பற்றத் திட்டமிடுவதாக அமெரிக்க அரசு சமீப வாரங்களில் எச்சரித்து வருகிறது.

மேற்கு நாடுகள் பொய்ச்செய்திகளைப் பரப்பிப் பிராந்தியத்தில் அரசியலை நிலையைக் குழப்பி வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியது.

சாள்ஸ் ஜெ. போமன்