தடுப்பூசி போடுதலை ஊக்குவிக்க, துணைதேடுபவர்களுக்கான செயலிகளுடன் இணைந்திருக்கிறது வெள்ளை மாளிகை.

அமெரிக்கர்களைக் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்ளும்படி ஊக்குவிக்கப் பல முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது ஜோ பைடன் அரசு. அவைகளிலொன்றாக ஆண், பெண்கள் தமக்கு இணைதேடப் பாவிக்கும் செயலிகளையும் பாவிக்கிறது வெள்ளை மாளிகை. Hinge, Tinder, Match, Bumble  ஆகிய செயலிகள் தடுப்பு மருந்து போட்டுக்கொண்டவர்கள் அதைத் தமது விபரங்களிலும் பகிர்ந்துகொண்டால் அதற்கான தனி அடையாளம் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. 

 அதே காரணத்துக்காகப் பாவிக்கப்படும் வேறு சில செயலிகள் தடுப்பு மருந்து போடாதவர்களைத் துணை தேடுபவர்கள் நிராகரிக்கும் வசதியையும் செயலிகளில் இணைத்திருக்கிறது. அத்துடன், குறிப்பிட்ட செயலிகளில் தடுப்பு மருந்துகள், அவைகளின் பலன்கள், எங்கே, எப்படிப் போட்டுக்கொள்ளலாம் போன்ற விபரங்களையும் இணைக்கிறார்கள்.

வயது வந்த அமெரிக்கர்களில் 60.5 % பேர் இதுவரை கொவிட் 19 தடுப்பூசிகளில் ஒன்றையாவது பெற்றிருக்கிறார்கள். ஜூலை 04 ம் திகதிக்கு முதல் 70 % அமெரிக்கர்கள் அதைச் செய்திருக்கவேண்டும் என்பது ஜோ பைடனின் குறியாகும். 

ஜனாதிபதியின் குறியை எட்டுவதற்காக மற்றும் பல ஊக்க நடவடிக்கைகளும் அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி முகாம்களில் குறிப்பிட்ட இலக்கத்தவருக்குப் பரிசு கொடுத்தல், இலவச Uber, Lyft வாகனங்கள் மூலம் தேவையானவர்களை அழைத்துச் செல்லுதல் போன்றவைகளும் நடக்கின்றன. அதைத்தவிர நிறுவனங்கள் தமது தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் ஊக்கத் தொகைகளும் கொடுக்கின்றன.

அமெரிக்க அரசின் ஊக்க நடவடிக்கைகளால் தினசரி 551,000 பேர் தடுப்பூசி போடுவதிலிருந்து 630,000 பேர் போடுதலாக அதிகரித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *