“ஆப்கானிஸ்தானில் ஐரோப்பிய ஒன்றியம் மிகக்குறைந்த அளவில் பிரதிநிதித்துவத்தைத் தொடங்கியிருக்கிறது.”

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதும் அங்கிருந்து தமது தூதரகங்களையும், பிரதிநிதித்துவக் காரியாலயங்களையும் உலக நாடுகள் பலவும் அகற்றின. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் பின் ஜனவரி 20 ம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியம் “நாம் எங்கள் அதி குறைவான பிரதிநிதித்துவத்தைக் காபுலில் தொடங்கியிருக்கிறோம்,” என்று தெரிவித்திருக்கிறது.

தலிபான்கள் ஆட்சியமைத்த பின்னர் ரஷ்யா, ஈரான், துருக்கி, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே தொடர்ந்தும் அங்கு தமது தூதுவராலயங்களை இயங்க வைத்திருக்கின்றன. அதேசமயம் அதன் அரத்தம் தாம் தலிபான்களை “ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாக” அங்கீகரிக்கவில்லை என்றும் அந்த நாடுகள் பல தடவைகள் சுட்டிக்காட்டி வருகின்றன. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் காரியதரிசி பீட்டர் ஸ்டானோ “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் மனிதகுல அவல நிலையைச் சீர்செய்வதற்காக ஆப்கானிஸ்தானுக்குக் கொடுக்கப்படும் மனிதபிமான உதவிகளை நிர்வகிக்கவே ஒன்றியம் அங்கே தொடர்புகளை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். அங்கே தூதுவராலயங்களைக் கொண்டிருக்கும் நாடுகளைப் போலவே தலிபான்களை “ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாக” அங்கீகரிக்கவில்லை என்று ஸ்டானோ குறிப்பிட்டார்.

பீட்டர் ஸ்தானோவின் அறிவிப்பையடுத்து தலிபான்களின் அரசு, “ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தில் ஒரே கருத்துடன் அவர்களின் காரியாலயம் காபுலில் நிறுவப்பட்டிருப்பதாக டுவீட்டியது. 

சாள்ஸ் ஜெ. போமன்