ஈரானில் சிறைவைக்கப்பட்டிருந்த இரண்டு பிரிட்டிஷ் குடிமக்கள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்புகிறார்கள்.

தொம்ஸன் ரோய்ட்டர் பவுண்டேஷனின் பகுதியான உதவி நிறுவனமொன்றில் பணியாற்றிய ஈரான்-பிரிட்டிஷ் குடியுரிமையுள்ள நஸானின் ஸஹாரி- ரட்கிளிப் என்ற பெண்மணி ஈரானியச் சிறையில் இருந்து ஆறு வருடங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டு தெஹ்ரானில் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் அங்கிருந்து நாடு திரும்புவதாக ஈரானியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது நபர் ஒரு ஓய்வுபெற்ற பொறியியலாளர் அனூஷே அஷூரி. அவர் 2017 இல் ஈரானில் வாழும் தனது தாயைச் சந்திக்கச் சென்ற சமயம் கைது செய்யப்பட்டார். இஸ்ராயேலுக்காக உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு 10 வருடச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 

ஈரானிய அரசைக் கவிழ்க்கத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நஸானின் ஸஹாரி- ரட்கிளிப், அனூஷே அஷூரி இருவரும் தம்மீது சாட்டப்பட்டது பொய்யாகச் சோடிக்கப்பட்ட குற்றங்களே என்று எப்போதும் கூறி வருகிறார்கள்.

முன்னாள் ஈரானிய அரசர் ஷா காலத்தில் ஈரானில் கொள்வனவு செய்யப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான விலையான சுமார் 520 டொலர்களை பிரிட்டனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வரையிலேயே இவ்விரண்டு பேரும் அங்கே சிறையில் வைக்கபட்டதாகக் கருதப்படுகிறது. ஐக்கிய ராச்சியத்தின் அரச தரப்பிலிருந்து  அவர்களும், மேலும் இரண்டு பெண்களும்  ஈரானில் தடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டதற்கும், குறிப்பிட்ட தொகையைக் கொடுக்காமலிருந்ததற்கும் சம்பந்தமில்லை என்கிறது. 

கனடா, ஆஸ்திரியா, சுவீடன், ஜேர்மனி, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் ஈரானில் வெவ்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டுச் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *