வெள்ளியன்று நடந்த யூரோ 2020 பந்தயங்களில் சுவீடன் மட்டுமே மூன்று புள்ளிகளைப் பெற்றது.

வெள்ளியன்று நடந்த மூன்று உதைபந்தாட்டப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது வெம்பிளியில் நடந்த இங்கிலாந்து – ஸ்கொட்லாந்துக்கு இடையிலான மோதலாகும். சாதாரணமாகவே இவ்விரண்டு அணிகளும் மோதும்போது சரித்திரகாலத் தேசிய உணர்வுகள் அவ்விரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே பொங்கியெழுவது வழக்கம்.

தனது முதலாவது மோதலில் செக் குடியரசிடம் தோற்றிருந்த ஸ்கொட்லாந்துக்கு இங்கிலாந்துடனான மோதலில் வெல்வது போட்டிகளில் தொடர்வதற்கு ஒரு கட்டாயமாக இருந்தது. 2021 ம் ஆண்டில் இவ்விரு அணிகளும் 6 தடவை மோதியதில் இங்கிலாந்து அணியே எல்லாவற்றிலும் வென்றிருக்கிறது. எனவே, வெள்ளியன்றும் அதுவே எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததற்கு மாறாக இங்கிலாந்துக்குத் தமது அதிபலத்தைக் காட்டியது ஸ்கொட்லாந்து. இரண்டுமே ஒரேயளவு தரமான அணிகள் என்று காட்டக்கூடியதாக போட்டி முழுவதுமே விறுவிறுப்பாக இருந்தது. தனது பாதுகாப்பில் எல்லா ஓட்டைகளையும் அடைத்தே வைத்துக்கொண்டு இங்கிலாந்தை அலையலையாகத் தாக்கிய ஸ்கொட்லாந்து அணி வீரர்களை வீழ்த்த இயலாத இங்கிலாந்தால் வலைக்குள் பந்தைப் போடவே முடியவில்லை. 0 – 0 என்றே மோதல் முடிவுபெற்றது.

பலமான, விளையாட்டில் நுட்பமான அணி என்று பெரிதும் கருதப்படும் கிரவேஷியா 2018 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியபோது சர்வதேச ரீதியில் பலரையும் கவர்ந்தது. இரண்டாவது இடத்தையும் பெற்றது. அதன் பின்னரும், பெரிதும் தனது திறமையைக் காட்டிவந்த கிரவேஷிய அணி தமது D – குழுவில் இங்கிலாந்துக்கு அடுத்த இடத்தில் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது முதலாவது மோதலில் பெல்ஜியத்திடம் தோல்வியைத் தழுவியது.

செக் குடியரசு தனது முதலாவது மோதலில் ஸ்கொட்லாந்தைச் சந்தித்தபோது பாற்றிக் ஷிக் யூரோ கோப்பைச் சரித்திரத்தில் ஒரு அழகான சாதனையாக மிக நீண்ட [45 மீற்றர்] தூரத்திலிருந்து ஒரு பந்தை வலைக்குள் போட்டுத் தன் குழுவுக்கு வெற்றியைக் கொடுத்தார். அதே பாற்றிக் ஷிக்கை நேற்றைய மோதலின் போது கிரவேஷியாவின் டேஜான் லோவ்ரன் மண்டையால் மோதிவிட்டார். கிரவேஷியாவின் வலைக்கருகே நடந்த அதற்கான நடுவர் வலைக்கு அருகே வைத்துப் பந்தை அடிக்க அபராதத் தண்டனை கொடுத்தார். மூக்கால் இரத்தம் வழிய வழியப் பந்தை வலைக்குள் போட்டார் பாற்றிக் ஷிக். அவ்விரு குழுக்களுக்கிடையேயான மோதல் 1 – 1 என்று முடிவடைந்தது.

தனது முதலாவது மோதலில் பலமான ஸ்பெய்னைச் சந்தித்த சுவீடன் வெள்ளியன்று ஸ்லோவாக்கியாவைச் சந்தித்தது. ஏற்கனவே போலந்தை 2 – 1 என்ற வித்தியாசத்தில் வென்றிருந்த ஸ்லோவாக்கியா E குழுவில் 3 புள்ளிகளைப் பெற்றிருந்தது. சுவீடன் ஒரு புள்ளியுடன் மட்டுமே மோதலுக்கு வந்தது. எனவே ஆகக்குறைந்தது ஒரேயளவு புள்ளையை மீண்டும் எடுத்தாலே யூரோ போட்டியில் தொடரலாம் என்ற நிலை. போலந்தும், ஸ்பெய்னும் ஒரு மோதல்கள் குறைவாகச் செய்திருக்கும் சமயத்தில் மோதிய சுவீடனும், ஸ்லோவாக்கியாவும் மீண்டும் மீண்டும் எதிர்த்தரப்பைத் தாக்கியவாறே இருந்தன. பந்தைப் பெருமளவில் தனது கட்டுப்பாட்டிலேயே ஸ்லோவாக்கியா வைத்திருக்க, பாதுகாப்பு அரண் நுட்பத்தில் தேர்ந்த சுவீடன் தவறொன்றும் விடாமல் தனது வலையைப் பாதுகாத்து வந்தது. 77 வது நிமிடத்தில் ஸ்லோவாக்கியா செய்த தவறுக்காக ஒரு அபராதமாக சுவீடனுக்குப் பந்தை வலைக்கு அதிக தூரமில்லாத ஒரு புள்ளியில் வைத்து உதைக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

சுவீடனின் எமிஸ் போஸ்பர்க் அடித்த அந்த பந்து வரும் திசையைப் பிழையாகக் கணித்த ஸ்லோவாக்கிய வலைக்காப்பாளரால் அதைப் பிடிக்க முடியவில்லை. விளைவு மோதல் சுவீடன் 1 – 0 என்று முடிவடைந்தது. நாலு புள்ளிகளைப் பெற்றிருக்கும் சுவீடன் அடுத்த கட்ட மோதலுக்குத் தயாராகியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *