நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் Right Livelihood பரிசை இவ்வருடம் வெல்பவர்களில் இந்தியாவின் LIFE அமைப்பும் ஒன்று.

இவ்வருடத்துக்கான Right Livelihood பரிசுகளை வெல்பவர்கள் நால்வர் யார் என்பது இன்று அறிவிக்கப்பட்டது. குழந்தைகளின் உரிமை, பழங்குடிகள் உரிமை, சுற்றுப்புற சூழல் பேணல் ஆகியவைகளுக்காகப் போராடும் கமரூன், ரஷ்யா, கனடா, இந்தியாவைச் சேர்ந்த நால்வர் அப்பரிசுகளைப் பெறுகிறார்கள்.

இந்தியாவின் Legal Initiative for Forest and Environment [LIFE]அமைப்பு அப்பரிசு பெறுபவர்களில் ஒருவராகும். காடுகள், சூழல் பரிபாலிப்புகளில் சட்டத்துடன் மோதுகிறவர்களுக்கு சட்ட ஆலோசனை, உதவி கொடுப்பதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும்.

ருத்விக் டுத்தா, ராகுல் சௌத்ரி ஆகியவர்களால் 2005 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு சாதாரண மனிதர்களின் சூழலில் பாதிப்புக்கள் ஏற்படுத்தப்படும்போது அவர்களுடைய வாழ்வாதாரம் அதனால் பாதிக்கப்படாமலிருக்க அதிகாரத்துடன் சட்டரீதியில் மோத உதவுகிறது. 

ஒரிஸ்ஸா மாநிலத்தில் சுரங்கம் நிறுவ முற்பட்ட பிரிட்டிஷ் நிறுவனமான Vedenta வின் நடப்பு அப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் சுற்றுப்புற சுழலைப் பெருமளவில் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டி நீதிமன்றத்துக்குச் சென்றது LIFE அமைப்பு. அந்த வழக்கில் “குறிப்பிட்ட சூழலில் வாழும் மக்கள் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் நிறுவனத்துக்குச் சுரங்கம் தோண்டும் அனுமதி கிடைக்காது,” என்று தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். அதுபோன்ற சிக்கல்களில் “முன்மாதிரி” ஆகியது அவ்வழக்கின் தீர்ப்பு.

“தொடர்ந்தும் பலவீனமான மக்களின் வாழ்வாதரம் பலமான அதிகாரத்தால் நசுக்கப்படும்போது சட்டத்தின் உதவியுடன் அம்மக்களுக்கு உதவி சுற்றுப்புற சூழல் பேணலில் ஈடுபடுகிறது LIFE அமைப்பு,” என்று அவர்களுக்கான பரிசுக்குக் காரணம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கனடாவில் பழங்குடியினரின் சார்பில் செயற்படும் ப்ரெடா ஹுஸன், ரஷ்யாவில் சுற்றுப்புற சூழல் பேணும் செயல்களில் ஈடுபடும் விளாமிடிர் ஸ்லிவ்யக் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காகக் கமரூனில் பாடுபடும் மார்த்தா மண்டௌ ஆகியோரும் Right Livelihood பரிசுகளை இவ்வருடம் பெறுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *