தடுப்பூசியின் பக்க விளைவு பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்க கனடா உடனடித் திட்டம்

கனடாவில் ‘கோவிட் 19’ வைரஸ் தடுப்பூசி செலுத்துவது அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் எவரேனும் தடுப்பூசியின் மிக மிக அரிதான பக்க விளைவுகளால் பாதிக்கப்படுமிடத்து அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டத்தை சமஷ்டி அரசு உடனடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கனடாவில் அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜேர்மனியின் பயோஎன்ரெக் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகிய “பைசர் – பயோஎன்ரெக்” தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கனெடிய மாகாணங்களில் வரும் நாட்களில் நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது.

முதலாவது தொகுதி தடுப்பூசி புட்டிகள் வரும் திங்களன்று கனடா மண்ணில் வந்திறங்கும் என்று மருந்துக் கொள்முதலுக்குப் பொறுப்பான அமைச்சர் அனிதா ஆனந்த் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மருத்துவப்பணியாளர்களதுக்கும் முன்னுரிமை அடிப்படையில் முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். 16 வயதுக்கு குறைந்தோருக்கு தடுப்பூசி ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை.

பிரிட்டன், பஹ்ரைன் நாடுகளை அடுத்து பைசர் -பயோஎன்ரெக் தடுப்பூசியை பாவனைக்கு அனுமதிக்கின்ற மூன்றாவது நாடு கனடா ஆகும்.

மிகவும் அரிதான பக்கவிளைவுகள் கொண்ட வைரஸ் தடுப்பூசி குறித்து மக்களிடையே நம்பிக்கையும் ஒத்துழைப்பும் உள்ள போதிலும் எல்லா கனடியர்களது பாதுகாப்புக்காகவும் தடுப்பூசி பாதிப்பு நஷ்டஈடு திட்டம் ஒன்றை (compensation program) தமது அரசு அறிமுகம் செய்வதாக பிரதமர் ஜஸ்ரின் ரூடோ (Justin Trudeau) தெரிவித்திருக்கிறார்.

அனைத்து தடுப்பூசிகளினாலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளுக்கு நஷ்டஈடுஈடு வழங்கும் இதுபோன்ற திட்டம் கனடாவில் அறிமுகமாவது இதுவே முதல் முறையாகும்.

வைரஸ் தடுப்பூசியால் ஒவ்வாமை போன்ற சிறு பக்கவிளைவுகளைத்தவிர கடுமையான பாதிப்புகள் ஏற்படுவது ஒரு மில்லியன் பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் மிக அரிதானது என்று அரசு உறுதி அளித்திருக்கிறது.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை வியாழனன்று 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

——————————————————————-

குமாரதாஸன்.                     11-12-2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *