பிரிட்டிஷ் முடியாட்சியிலிருந்து விலகிக்கொள்ள கனடியப் பாராளுமன்றம் மறுத்தது.

பிரிட்டிஷ் அரசர் சார்ள்ஸ் III இன் முடியாட்சியின் கீழிருந்து விலக்குவதா என்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலானோர் “வேண்டாம்” என்றே வாக்களித்தனர். கனடாவின் எதிர்க்கட்சியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரிட்டிஷ் முடியாட்சியிடமிருந்து கனடா வெட்டிக்கொள்ள வேண்டும் என்ற  மசோதாவுக்கு 44 வாக்குகளே ஆதரவாகக் கிடைத்தன. 266 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

“பாழடைந்துபோன பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழிருந்து கனடா விடுதலை பெறவேண்டும்,” என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் Yves-Francois Blanchet குறிப்பிட்ட மசோதாவை முன்வைத்திருந்தார்.  

மகாராணி எலிசபெத் மறைந்த பின் முடியாட்சியிலிருந்து வெளியேறுவதற்குப் பல நாடுகள் திட்டமிட்டிருக்கின்றன. பிரிட்டிஷ் முடியாட்சிக்குத் தனக்குக் கீழேயிருக்கும் நாடுகளில் முன்னர் போன்ற கௌரவமும், பவிசும் புதிய அரசனின் காலத்தில் இருக்காது போன்ற பல காரணங்கள் விவாதிக்கப்பட்டன. 

“கனடியர்கள் இன்று மிக முக்கியமான பல பிரச்சினைகள் பற்றியே சிந்தித்து வருகிறார்கள். வாழ்க்கைச்செலவு அதிகப்படுதல், சர்வதேச அரசியலில் நிலையற்ற தன்மை, காலநிலை மாற்றத்தின் பாதகங்கள் போன்றவற்றில் கவனமெடுக்க வேண்டிய நிலையில் இது போன்ற சிறிய விடயங்களில் அனாவசியமாக நேரத்தை வீணடிக்க கனடியர்கள் விரும்பவில்லை,” என்று பிரதமர் ஜஸ்டின் டுருடூ குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *