ஆளுக்கு 11 வாரங்கள், ஊதியத்துடன் பெற்றோர் விடுமுறையை டென்மார்க் நடைமுறைப்படுத்தும்.
குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் அதன் பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் 11 வாரங்கள் விடுமுறை என்ற விதியை டென்மார்க் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது. ஓகஸ்ட் 2 ம் திகதிமுதல் அமுலுக்கு வரவிருக்கும் இந்தச் சட்டத்தின்படி பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் 11 வார விடுமுறையை அவர் மற்றவருக்குக் கொடுக்க முடியாது.
குழந்தை பெற்றுக்கொண்ட பெற்றோருக்கான ஊதியத்துடனான விடுமுறை இருப்பினும் பெரும்பாலும் தாய்மாரே முழு விடுமுறையையும் எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த நிலையை மாற்றி இரண்டு பெற்றோரையும் சரி சமமாகப் பிள்ளை மீது அக்கறை எடுத்து அவர்களுடனான தொடர்பை ஸ்தாபித்துக்கொள்ளவே பெற்றோர் விடுமுறையில் ஒரு பகுதி கட்டாயம் குறிப்பிட்ட பெற்றோருக்கு என்று ஒழுங்கு செய்யப்படுகிறது. இப்படியான மாற்றம் நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் ஏற்கனவே இருந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனது நாடுகளில் தலைக்கு 9 வாரங்களையாவது இருவரிடையே பிரித்துக்கொள்ளவேண்டும் என்ற மாற்றத்தை சமீபத்தில் அறிவித்திருக்கிறது.
டென்மார்க் அரசு மேற்கண்ட மாற்றத்தை மட்டுமன்றி ஜனவரி 2024 முதல் பிள்ளை பெற்றுக்கொள்ளும் ஓரினத் தம்பதிகளுக்கும் அதேவித உரிமைகளை நடைமுறைப்படுத்தும். தனியான ஒருவர் பெற்றோராக இருப்பின் அவர் தனது நெருங்கிய குடும்ப உறவினர் ஒருவருடன் பெற்றோர் விடுமுறையைப் பகிர்ந்துகொள்ளவும் உரிமையுண்டு.
சாள்ஸ் ஜெ. போமன்