தடுப்பு மருந்துக் கூட்டுறவு ஒப்பந்தம் செய்துகொள்ள டென்மார்க்கும், ஆஸ்திரியாவும், இஸ்ராயேலை நாடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமாக இருந்த “ஒன்றுபட்டுத் தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்துகொள்ளுதல்,” எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே, டென்மார்க், ஆஸ்திரிய நாடுகளின் பிரதமர்கள் தம் நாட்டில் பெரும்பாலானோருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் குறுகிய காலத்தில் வெற்றியடைந்திருக்கும் இஸ்ராயேலுக்குப் பயணமாகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கொள்வனவு ஒப்பந்தங்களால் நாடுகளுக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை இதுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை. பெரிதும் நம்பப்பட்ட அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகள் மேலிருக்கும் அவநம்பிக்கை ஒரு பக்கமிருக்க அந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்ய முடியாமல் தயாரிப்புப் பிரச்சினைகளை எதிர்நோக்கிவருகிறது.

எனவே “எப்படியாவது தடுப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத நிலைமையை எதிர்காலத்தில் உருவாக்க நாம் புதிய வழிகளை நாடவேண்டும். நான் ஒரு இடத்தில் மட்டுமே எமது தேவைகளுக்காக நம்பியிருக்கலாகாது,” என்று அவ்விரண்டு நாடுகளின் தலைவர்களும் குறிப்பிடுகிறார்கள்.

இவ்விரண்டு நாடுகளும் இஸ்ராயேலை நாடுவது அங்கிருந்து தடுப்பு மருந்துகளை வாங்கிக்கொள்வதற்காக இருக்கலாம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்புக்கு வெளியே வேறொரு ஒப்பந்தம் செய்யப்போகிறார்கள், போன்ற விமர்சனங்கள் அவர்களது இஸ்ராயேல் விஜயம் பற்றி எழாமலில்லை. 

“இஸ்ராயேலிடம் மேலதிகமாகத் தடுப்பு மருந்துகள் இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கொள்வனவு செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், நாம் அவர்களிடம் பேசப்போவது எதிர்கால ஒத்துழைப்புக்கள் பற்றியே,” என்கிறார் டென்மார்க்கின் பிரதமர் மெத்தெ பிரடெரிக்ஸன். இஸ்ராயேலுடன் ஒன்றிணைந்து தயாரிப்பு மையங்களை ஸ்தாபித்து எதிர்காலத்தில் தேவையான தடுப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்படாமலிருக்கச் செய்வதே தமது நோக்கம் என்கிறார்கள் அவ்விரு தலைவர்களும்.

இதுபற்றி ஐரோப்பிய் ஒன்றியத்தின் தலைவர்கள் பதிலளிக்கையில் “அவர்கள் இஸ்ராயேலுடன் கூட்டுறவாக இயங்குவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மாறாக, அப்படிப்பட்ட கூட்டுறவுகள் மூலம் நாங்களும் புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளலாம்,” என்கிறார்கள். 

இன்னொரு பக்கத்தில் ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, போலந்து போன்ற நாடுகள் சீனா மற்றும் ரஷ்யாவின் தடுப்பு மருந்துகளைத் தங்கள் நாட்டில் பாவிக்க விளைகின்றன. அத்தடுப்பு மருந்துகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகளை ஆராயும் மத்திய குழுவால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *