பன்றி இருதயம் பொருத்தப்பட்ட முதலாவது மனிதரின் உயிர் பிரிந்தது.
பழுதடைந்த இருதயத்துக்குப் பதிலாக, மரபணுக்கள் மாற்றப்பட்ட பன்றியொன்றின் இருதயத்தைப் பொருத்திக்கொண்டவர் இறந்தார் என்று அந்தச் சிகிச்சையை நடத்திய மருத்துவ நிலையம் தெரிவித்திருக்கிறது. அவர் இரண்டு மாதங்கள் உயிர்வாழ்ந்த பின்னர் மார்ச் 08 ம் திகதியன்று இறந்திருக்கிறார்.
57 வயதான டேவிட் பென்னட்டுக்கு, ஜனவரி மாதம் 7 ம் திகதியன்று பன்றியின் இருதயம் சத்திர சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்னரே அவர் பிழைக்கப்போவதில்லை என்று தெரிந்தவுடன் இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் மருத்துவ சேவைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்தன. தனது கடைசி மணி நேரங்களிலும் பென்னட் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டிருந்தார்.
பென்னட் ஒரு குற்றவாளியாகும். 1988 இல் பல தடவைகள் ஒருவரைக் கத்தியால் குத்தியதால் அந்த நபர் பெரிதும் பாதிக்கப்பட்டு உடல் செயற்பாடுகள் இயங்காமல், தள்ளுவண்டியில் வாழவேண்டியதாயிற்று. கத்திக்குத்துகளின் பாதிப்பினால் அவர் 2005 இல் மரணமடைந்தார். தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்பதால் ஒருவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை மறுக்க இயலாது என்ற கோட்பாட்டின்படியே பென்னட் மெரிலாண்ட் மருத்துவசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
“நோயெதிர்ப்பு அமைப்பு போதுமான அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் போது, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் மனித உடலுக்குள் நன்றாகச் செயல்பட முடியும் என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளைப் பெற்றுள்ளோம்,” என்று மருத்துவமனையின் விலங்கின் அங்கங்களை மனிதருகுப் பாவிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடும் அந்த மருத்துவ நிலையத்தின் உயர் நிர்வாகி முஹம்மது மொய்தீன் பென்னட்டுக்குக் கொடுத்த சிகிச்சை பற்றிக் கருத்துத் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்