முதல் தடவையாக மனிதரொருவருக்குப் பன்றியின் இருதயம் பொருத்தப்பட்டு இயங்குகிறது.

அமெரிக்கா, மெரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் 57 வயதான ஒருவருக்கு முழுவதுமாக ஒரு இருதயத்தைப் பொருத்திச் செயற்பட வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவ்விருதயம் பொருத்தப்பட்டவர் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது அவரது உடல் அவ்விலங்கின் இருதயத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம் என்று குறிப்பிடப்படுகிறது.

பல மாதங்களாகவே படுக்கையாகக் கிடந்ததால் பலவீனமுற்றிருந்த டேவிட் பென்னட் உடம்பு மனித இருதயமொன்றை ஏற்றுக்கொள்ளாது என்ற நிலை இருந்தது. அச்சமயத்தில் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி நடவடிக்கையாக மரபணுக்கள் மாற்றப்பட்ட பன்றியின் இருதயமொன்றை அவருக்கு மருத்துவர்கள் பொருத்தினார்கள்.

பென்னட் தொடர்ந்தும் நீண்ட காலம் வாழ்வாரா என்பது இன்னும் கேள்விக்குறியே. வரவிருக்கும் வாரங்களில் அவரது உடல் நிலை எப்படியாகிறது என்பதைப் பொறுத்தே அந்த அங்கம் பொருத்தல் எத்தனை வெற்றிகரமானது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எப்படியாயினும் இன்னொரு விலங்கின் அவயவமொன்றை மனித உடல் தன்னுடன் சேர்ந்தியங்க மறுக்காமலிருப்பது ஒரு வெற்றியே என்று குறிப்பிடும் மருத்த்துவர்கள், எதிர்காலத்தில் மனித அவயவங்களுக்கான தட்டுப்பாட்டை இல்லாமல் செய்ய இது ஒரு ஒளிக்கீற்று என்று குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்