இந்தியா தவறுதலாகச் சுட்ட ஏவுகணையிலிருந்து பல பயணிகள் விமானங்கள் மயிரிழையில் தப்பின.
கடந்த வாரம் இந்திய இராணுவத்தால் தவறுதலாகச் சுடப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்று வெடித்தது. அது இந்தியாவின் அம்பாலா இராணுவத் தளத்தில் சுடப்பட்டு பாகிஸ்தானின் மியான் சண்ணு என்ற இடத்தில் சென்று விழுந்து வெடித்தது. அது மட்டுமன்றி, வானத்தில் பறந்துகொண்டிருந்த சில பயணிகள் விமானங்களும் மயிரிழையில் தப்பியிருக்கின்றன என்ற விபரமும் வெளியாகியிருக்கிறது.
டுபாயிலிருந்து சியால்கோட்டுக்குப் பறந்துகொண்டிருந்த பிளை டுபாய், சிறீநகரிலிருந்து மும்பாயை நோக்கிப் பறந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம், லாகூரிலிருந்து ரியாட்டுக்குச் சென்ற ஏர்புளு விமானம் ஆகியவை அந்த ஏவுகணையின் திசைக்குள் பறந்துகொண்டிருந்தன. இவ்விபரங்களை விமானங்களின் பறத்தலைக் கண்காணிக்கக்கூடிய தொழில் நுட்பத்தின் மூலம் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அவைகளைத் தவிர அவ்வழியை சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், குவெய்த் ஏர்லைன்ஸ் ஆகியவைகளின் விமானங்களும் நெருங்கிக்கொண்டிருந்தன. அந்த விமானிகள் எவருக்குமே ஏவுகணை பற்றிய எச்சரிக்கையெதுவுமே கொடுக்கப்படவில்லை.
குறிப்பிட்ட ஏவுகணை பாகிஸ்தானுக்குள் விழுந்தவுடன் பாகிஸ்தான் உடனடியாக இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தியிருக்கக்கூடிய அபாயமும் இருந்தது. பாகிஸ்தான் இராணுவம் அந்த ஏவுகணை செலுத்தப்பட்டதில் ஏதோ தவறு நடந்திருக்கலாம் என்று ஊகித்துக்கொண்டு பதிலுக்குத் தாக்கவில்லை. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இவ்விரண்டு நாடுகளிடையே இந்தியாவின் “தவறு” பெரும் ஆபத்தாகவும் முடிந்திருக்க வாய்ப்பிருந்தது என்பதையும் இராணுவத்துறை அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
பாகிஸ்தானும், இந்தியாவும் இந்த ஏவுகணைத் தாக்குதல் பற்றி தத்தம் இராணுவத் துறைக்குள் விபரமான விசாரணைகள் நடத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்