ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபையிலிருந்து மற்றைய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைகள் ஒதுங்கிக்கொள்கின்றன.
உக்ரேனுக்கெதிராகப் புத்தின் நடத்திவரும் போருக்குத் தனது முழு ஆதரவையும் வழங்கியிருக்கிறார் ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபையின் பிரதம குரு [Patriarch] கிரில். எப்போதும் போலவே புத்தினின் அரசியல் நகர்வுகளுக்கெல்லாம் ஆதரவு கொடுத்துவரும் கிரில்லிடமிருந்து ஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள் உலகின் மற்றைய ஓர்த்தடொக்ஸ் திருச்சபையினர். ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபையின் மேற்றிராணிமார் சிலரும் கூட தமது பிரதம குரு கிரில் போருக்குக் கொடுத்துவரும் ஆதரவை எதிர்த்து வருகிறார்கள்.
கிரில் தனது முழு ஆதரவையும் புத்தினுக்குக் கொடுத்து வருவதால் 2018 லிருந்தே ஓர்த்தடொக்ஸ் திருச்சபையின் வெவ்வேறு பிராந்தியத் தலைமைகளுக்கு இடையேயான பிளவு ஆரம்பித்துவிட்டது. அத்திருச்சபையின் உலகளாவிய ஆன்மீகத் தலைவரான கொன்ஸ்தாந்தினோபிள் பிரதம குரு பார்த்தலோமையோ I
உக்ரேன் ஓர்த்தடொக்ஸ் திருச்சபையை சுயமான பிராந்தியத் திருச்சபை என்று அறிவித்தார். அதை எதிர்த்துக் கிரில் தமது திருச்சபையின் ஆன்மீகத் தலைவரான பார்த்தலோமையோ I வுடன் தொடர்புகளை வெட்டிக்கொண்டார்.
உக்ரேனுக்காக ஒரு சுயமான ஓர்த்தடொக்ஸ் திருச்சபையும் அதற்குத் தலைவராக எபிபானியோஸ் என்ற பிரதம குருவும் செயற்பட்டு வருகிறார்கள். அதைத் தவிர உக்ரேனில் வாழும் ரஷ்யர்கள் ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபையின் அங்கத்துவராக இருந்து வருகிறார்கள். அவர்களுக்குத் தலைவராக ஒனுவிரேய் என்ற பிரதம குரு செயற்பட்டு வருகிறார். இந்த இரண்டு சாராரின் மீதும் ரஷ்யாவின் ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவர்கள் போர் நிகழ்த்தி வருகிறார்கள்.
ஓர்த்தடொக்ஸ் திருச்சபையின் அங்கத்துவர்களிடையே ஏற்பட்டிருக்கும் போரால் உக்ரேன் கிறீஸ்தவர்கள் பிளவுபடுத்தப்பட்டு இரத்தம் சிந்துவதற்குப் பிரதம குரு ஒருவரின் ஆசீர்வாதம் கொடுக்கப்படுவது கிறீஸ்தவ கோட்பாடுகளுக்கே விரோதமானது என்று கண்டித்து உலகின் 500 ஓர்த்தடொக்ஸ் குருக்கள், தலைவர்கள் கிரிலுக்குப் பகிரங்கமாகக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்