உக்ரேன் – ரஷ்யாவுக்கிடையே சமாதானம் ஏற்படுத்தும் அடுத்த முக்கிய புள்ளி துருக்கிய ஜனாதிபதி.

கருங்கடல், சிரியா, ஈராக் பிராந்தியங்களில் ரஷ்யாவைப் போலவே ஈடுபாடுள்ள நாடான துருக்கியின் ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டகான் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவராக முனைந்திருக்கிறார். அவ்விரு நாடுகளுக்கிடையே சில மாதங்களுக்கு முன்னர் முறுகல் ஏற்பட ஆரம்பித்த காலம் முதல் எர்டகான் தன்னை ஒரு நடுவராக முன்வைக்க முயற்சி செய்தமை இப்போதுதான் வெற்றியளித்திருக்கிறது.

ரஷ்ய, உக்ரேனிய வெளிவிவகார அமைச்சர்களை மத்தியதரைக்கடல் துறைமுக நகரமான அந்தாலியாவில் வரவேற்றிருக்கிறார் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லுத் சவெஸொக்ளு. ரஷ்யாவின் செர்கெய் லெவ்ரோவும், உக்ரேனின் டிமித்ரோ குலேபாவும் வியாழனன்று அந்தாலியாவுக்கு வந்து பேச்சுவார்த்தைகளுக்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருப்பதாக அதிகாலையிலேயே செய்திகள் வந்திருந்தன.

இதே போலவே மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருந்த இஸ்ராயேலின் ஜனாதிபதி புதன் கிழமையன்று ஈசாக் ஹெர்சோக் துருக்கிக்கு விஜயம் செய்திருந்தார். நீண்ட காலமாகத் தமக்குள் முரண்பாடுகளைக் கொண்டிருந்த இஸ்ராயேலும், துருக்கியும் சமீப காலத்தில் அவற்றைக் களைந்து சுமுகமான உறவை உண்டாக்கிக்கொள்ள முயன்று வருகின்றன. இஸ்ராயேலின் உயர்மட்டத் தலைவரொருவர் துருக்கிக்கு விஜயம் செய்வது 2007 க்குப் பின்னர் இதுவே முதல் தடவையாகும்.

https://vetrinadai.com/israel-is-trying-to-start-a-peace-talk-in-between-russia-and-ukraine/

நாட்டோ அமைப்பின் அங்கம் வகிக்கும் துருக்கி மத்தியஸ்தராக இயங்கும் இந்தப் பேச்சுவார்த்தைகள் போரை நிறுத்துமென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. உக்ரேனிய வெளிவிவகார அமைச்சரும் அந்தக் கருத்தையே இன்று காலையில் தெரிவித்திருந்தார். நடக்கும் போரில் மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்கவும், தொடர்ந்தும் இருசாராருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் புதிய நகர்வுகளை எடுக்கவும் மட்டுமே இப்பேச்சுவார்தைகள் உதவும் என்று கணிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *