தேர்தல் வாதங்களில் பங்கெடுக்க மாட்டேனென்று மக்ரோன் சொல்லிவிட்ட பின்னரும் அவருக்கான ஆதரவு அதிகரிக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் பிரெஞ்ச் ஜனாதிபதித் தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகி வருகின்றன. தான் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் போட்டியிடப்போவதாக கடந்த சனிக்கிழமையன்று அறிவிக்கத் திட்டமிடப்பட்ட அவரது பிரச்சாரக் கூட்டத்தை அவர் ரத்துச் செய்துவிட்டு அதை வெறும் பத்திரிகையாளர் அறிவிப்பாக்கியிருந்தார்.

ஏப்ரல் 10 ம் திகதியும், ஏப்ரல் 24 ம் திகதியும் பிரான்ஸில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மொத்தமாகப் பனிரெண்டு வேட்பாளர்கள் ஜனாதிபதியாகப் போட்டியிடுவதற்காகத் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தாராளமயமாக்கல் பொருளாதாரத்தின் ஆதரவாளரான தற்போதைய ஜனாதிபதி மக்ரோன் மட்டுமே அவருடையதைப் போன்ற கோட்பாடுகளுடன் நிற்கும் ஒரு வேட்பாளர் எனலாம். இடதுசாரிகள் முதல் கடும் இடதுசாரிகள், வலதுசாரித் தேசியவாதிகள் முதல் கடுமையான தேசியவாத அரசியல் கோட்பாடுகளை முன்வைத்துப் போட்டியில் இறங்கியிருப்பவர்களே களத்தில் அதிகம் எனலாம். எனவே, இரண்டாவது சுற்றுப் போட்டியில் வெல்லக்கூடிய ஆதரவைத் தற்போதைய ஜனாதிபதி மக்ரோன் மட்டுமே பெற்றிருக்கிறார் என்று அரசியல் வல்லுனர்கள் கணிக்கிறார்கள்.

சமீப வாரங்களில் மக்ரோன் உள்நாட்டு அரசியலிலிருந்து கணிசமான அளவு ஒதுங்கியிருக்கிறார். உக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிக்கும் என்ற நிலைமை உண்டாகியதிலிருந்தே அவர் பெருமளவில் ஒரு சர்வதேச அரசியல்வாதியாக, ராஜதந்திரியாக உருவெடுத்திருக்கிறார். ரஷ்ய ஜனாதிபதியுடன் தனக்கு இருக்கும் நெருங்கிய உறவை மூலதனமாக வைத்து அப்பிரச்சினைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்தும் முயற்சிகளில்தான் மக்ரோனின் பெருமளவு நேரம் செலவாகிறது எனலாம்.

தமது ஜனாதிபதி ஒரு சர்வதேச ராஜதந்திரியாக மதிக்கப்படுவதைப் பிரெஞ்ச் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்றே கருத்துக் கணிப்பீடுகளில் தெரிகிறது. வலதுசாரிகளிடையே பல வேட்பாளர்கள் இருப்பதாலும், இனவாதம், நிறவாதம் போன்றவை உக்ரேன் மீதான போரின் பின்னர் குறைந்திருப்பதாலுமோ என்னவோ அக்கோட்பாடுகளுக்கான ஆதரவு பிரான்ஸில் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

மக்ரோனுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக ஆதரவு பெறுபவர் வலதுசாரித் தேசியவாதியான மரி லூ பென். அவரையடுத்து மூன்றாவது அதிக ஆதரவு பெறுபவர் இடதுசாரி வேட்பாளர் ஷோன் லு மெலன்சோன் ஆகும்.

நிறவாதத்தையே தன் பிரதான கோட்பாடாகக் கொண்டு தேர்தல் களத்தில் குதித்தவர் தொலைக்காட்சிப் பிரபலமான எழுத்தாளர் எரிக் ஸெம்மூர். தனிக் கட்சி ஆரம்பித்த அவரை ஆரம்பிப்பதாக ஆரம்பத்தில் கணிப்புக்கள் குறிப்பிட்டன. நாளடைவில் தனது நிலைப்பாட்டில் சிறுபான்மையினரையும், இஸ்லாமியர்களையும் குறிவைத்துத் தாக்கிய அவரின் ஆதரவு குறைந்து வருகிறது. சுமார் 12 % ஆதரவையே அவர் பெறுவதாகக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *