இஸ்ராயேலின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய கூட்டத்தை ஈர்த்தது பழமைவாத யூதத் தலைவரின் இறுதிச்சடங்கு.
பழமைவாத யூதர்களின் முக்கிய குருவான சாயிம் கனியேவ்ஸ்கி தனது 94 வது வயதில் வெள்ளியன்று காலமானார். ஹெராதிய யூதர்கள் மத்தியில் “தோரா ஏடுகளின் இளவரசன்” என்று போற்றப்படும் அவர் யூதச் சட்டங்களைக் கற்பிப்பதிலும், குறிப்பிட்ட யூத நம்பிக்கையுள்ளவர்களிடையே மத ரீதியான இறுதி முடிவுகளை எடுப்பதிலும் முக்கிய புள்ளியாக இருந்தார்.
தலைநகரான தெல் அவிவின் புறநகரொன்றில் நடந்த இறுதிச் சடங்கில் பங்குகொள்ள நாடெங்குமிருந்தும் ஹெராதி யூதர்கள் குவிந்தார்கள். சுமார் 500,000 முதல் 750,000 பேருக்குக் குறையாத அவர்களால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து மூடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இஸ்ராயேலின் அரசியல் தலைவர்களான் யிட்சாக் ரபின், ஷிமோன் பரீஸ், ஏரியல் ஷரோன் ஆகியோருடைய இறுதி ஊர்வலங்கள் எவற்றிலும் காண முடியாத அளவில் மக்கள் குவிந்திருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இறுதிச் சடங்குகள் நடக்கவிருந்த பிராந்தியத்தின் மொத்தச் சனத்தொகையே 180,000 பேராகும். அப்பகுதிக்கு வரவிருந்த பெரும் கூட்டத்தைப் பற்றி பொலீசார் சனியன்றே எச்சரிக்கை தெரிவித்திருந்தார்கள். 2021 இல் இதே யூத சமூகத்தின் முக்கிய நாளொன்றைக் கொண்டாட வந்தவர்களால் கட்டடமொன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சுமார் 45 பேர் இறந்து மேலும் 150 பேர் காயமடைந்தது போன்ற விபத்தொன்று ஏற்படலாகாது என்பதை அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.
சாள்ஸ் ஜெ.போமன்