கொரோனாப் பரவல் காலம் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் நோர்டிக் நாடுகளில் பிள்ளைப்பேறுகளை அதிகரித்தது.
கொரோனாத்தொற்றுக் காலத்தில் சமூகத்தில் பரவலாக ஏற்பட்டிருந்த நிச்சயமற்ற நிலபரத்தையும் மீறி வட ஐரோப்பிய நாடுகளில் பிள்ளைப் பேறுகளைக் கணிசமான அளவில் உயர்த்தியிருக்கிறது. மற்றைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பொருளாதார அபிவிருத்தியைப் பொறுத்தவரை கூட நோர்டிக் நாடுகள் ஓரளவு சமாளித்திருக்கின்றன.
கொரோனாத்தொற்றுப் பரவிய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மிகக் குறைந்தளவு நாடுகளே அக்காலகட்டத்தைப் பலமாக எதிர்கொண்டிருக்கின்றன. நோர்டிக் நாடுகளில் கிரீன்லாந்தைத் தவிர மற்றைய நாடுகளில் அதிக பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்கிறது அந்த அறிக்கை.
“தமது தொழில்துறை முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைச் சமயத்தை நோர்டிக் நாடுகளின் தம்பதிகள் பிள்ளை பெற்றுக்கொள்ள ஒரு இடைவெளி கிடைத்ததாகக் கருதியிருக்கலாம். அல்லது, பிள்ளைபெற்றுக்கொள்வதன் மூலம் தமது குடும்ப வருமானத்தை [பிறக்கும் பிள்ளைகளுக்கு அரசால் கொடுக்கப்படும் உதவித்தொகை] அதிகரித்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கலாம்,” என்கிறார் அந்த ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்ட நூரா சஞ்செஸ் கஸன்.
ஜனவரி – செப்டெம்பர் 2021 காலத்தில் பின்லாந்தில் பிள்ளைப்பிறப்புக்கள் அதற்கு முந்தைய வருடத்தை விட 7,1 % ஆலும், நோர்வேயில் 5.7 % ஆலும் , ஐஸ்லாந்தில் 7.8 % ஆலும், டென்மார்க்கில் 3.2 % ஆலும், சுவீடனில் 0.7 % ஆலும் அதிகரித்தன.
அதற்குக் காரணம் நோர்டிக் நாட்டு அரசுகள் மக்கள் கொரோனாக்காலத்தில் இழந்த வருமானத்துக்கு ஈடான பொருளாதார உதவிகளை வழங்கியது. சமூகத்தின் பாதுகாப்புக்கான வலை அந்த நாடுகளில் பலமாக இருக்கிறது. அத்துடன் அப்பிராந்திய மக்களிடம் தமது அரசின் மீது பலமான நம்பிக்கை இருக்கிறது என்று விளக்கமளிக்கிறார் நூரா சஞ்செஸ் கஸன்.
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கொரோனாத்தொற்றுக் காலகட்டத்தில் சராசரியாக 5.9 விகிதத்தால் வீழ்ச்சியடைய நோர்டிக் நாடுகளிலோ அவ்வீழ்ச்சி சுமார் 3 விகிதம் மட்டுமே.
சாள்ஸ் ஜெ. போமன்