“தென்னாபிரிக்காவில் ஒமெக்ரோன் அலை ஓய்ந்திருப்பது கொரோனாவின் தாக்கம் முன்னரைவிடக் குறைந்திருப்பதற்கு அடையாளம்!”

உலக நாடுகள் பலவற்றிலும் ஓமெக்ரோன் திரிபு அதீத வேகத்தில் பரவி வருகிறது. நவம்பரில் அதை அடையாளம் கண்ட தென்னாபிரிக்காவில் அதன் உச்சக்கட்டப் பரவல் கழிந்துவிட்டதாக மருத்துவ விற்பன்னர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே தென்னாபிரிக்கா தனது நாட்டில் இருந்த பெரும்பாலான கொரோனாப்பரவல் கட்டுப்பாடுகளை வாபஸ் வாங்கிவிட்டது.

தொடர்ந்தும் டெல்டா திரிபும் பரவிவருவதால் உலக நாடுகளில் கொவிட் 19 ஆபத்து தொடர்வதாக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு குறிப்பிட்டு வருகிறது. பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றில் பரவல் வேகம் நாட்டின் மருத்துவமனைகளுடைய சேவைகளைத் தளம்பவைக்கும் நிலைக்கு எட்டியிருக்கின்றது. டென்மார்க் சமீப நாட்களில் உலக நாடுகளில் மிக அதிகமான கொரோனாப் பரவலை ஒரே நாளில் எட்டிய நாடு என்ற உச்சத்துக்குப் போனது. 

இறப்புக்களைப் பொறுத்தவரை கொவிட் 19 தற்சமயம் பலரின் உயிரைக் குடிக்கவில்லை என்பது பல ஆராய்ச்சியாளர்களாலும் சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது. தொற்றியவர்களின் எண்ணிக்கையில் இலக்கத்தால் மக்கள் பெரிதும் கலங்கினாலும் அவ்வெண்ணிக்கை கடந்த வருடம் போல ஆபத்தைக் குறிக்கவில்லை. காரணங்களாகப் பல நாடுகளிலும் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருப்போர்கள் எண்ணிக்கை அதிகமாக இருத்தல்,,  ஒமெக்ரோன் தொற்று பெரும்பாலானோரை மருத்துவ உதவியை நாட வைக்கவில்லை, இந்த நோயைக் கையாள்வதற்குரிய வழிகள் பல உண்டாகியிருப்பது போன்றவை சுட்டிக் காட்டப்படுகின்றன.

ஜேர்மனியின் தொற்றுநோய்ப் பரவல் ஆராய்ச்சியாளர் கிரிஸ்டியான் ட்ரொஸ்டின் 2022 உலக மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் காலமாக அமையும் என்கிறார். தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட பரவலும் அதன் நடப்பும், குறைதலும் கொவிட் 19 ஆபத்தான பெரும்தொற்று என்ற நிலைப்பாட்டைத் தாண்டிவிட்டது என்கிறார். அது இனிமேல் ஆங்காங்கே ஏற்படும் தடிமல், ஜலதோஷம் போன்ற ஒரு நோய்க்கு ஈடாகவே மாறிவருவதாக ட்ரொஸ்டின் குறிப்பிட்டிருக்கிறார்.

மூன்றாவது தடுப்பூசியும், முகக்கவசமும் இவ்வருடத்தில் அவசியமாக இருக்கும் என்று ட்ரொஸ்டின் தெரிவித்தார். இவ்வியாதி ஆங்காங்கே மனிதர்களிடையே காணப்படும் பலவீனங்களினுடாகப் பரவி, அடுத்த கட்டமாக அவர்களுடைய உடலில் அவற்றுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்தும் என்கிறார் அவர்.

சாள்ஸ் ஜெ. போமன்