அகதிகள், புகலிடம் கோருவோருக்கு விரைவாகத் தடுப்பூசி ஏற்ற ஏற்பாடு.

அகதிகள்,புகலிடம் கோருவோர் மற்றும் தொழில் நிமித்தம் தங்கியுள்ள குடியேறிகளுக்கு தடுப்பூசி ஏற்றுவதை விரைவாகமுன்னெடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் சாதாரண மக்கள் தொகையினருடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரிடையே தடுப்பூசி ஏற்றியோரின் வீதம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே அவர்களுக்கு ஊசி ஏற்றும் பணிகளை விரைவாக இம்மாதஇறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அதிகாரிகள் கேட்கப்பட்டுள்ளனர். குடியேறிகள் தங்கியுள்ள இடங்களிலும் அகதிகளை வரவேற்கின்ற நிலையங்களிலும் உள்ளவர்களுக்கு நடமாடும் தடுப்பூசி வசதிகள் மூலம் ஊசி ஏற்றும் பணியை துரிதப்படுத்துமாறு குடியுரிமைகளுக்கான அமைச்சர் மார்லின் ஷியப்பா(Marlène Schiappa)பொலீஸாருக்கும் பிராந்தியங்களது சுகாதாரப் பணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரான்ஸின் குடிவரவு மற்றும் அகதிகள் ஒருமைப்பாட்டு அலுவலகத்துக்கு (l’Office français de l’immigration et de l’intégration-OFII) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மொழிப் பிரச்சினை, இணைய சாதனங்கள் ஊடாகத் தடுப்பூசிக்கான இடங்கள், கால நேரங்களைப் பெற்றுக் கொள்ளு கின்ற வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களால் அகதிகள் தடுப்பூசி ஏற்றமுடியாத சூழ்நிலைகளில் வாழ்கின்றனர்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *